×

மாஸ்க், பிபி கிட் ஆகியவற்றை உரிமம் இல்லாமல் விற்க கூடாது: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: முகக்கவசம், நோயாளி அணியும் ஆடை உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள்உரிமம் இல்லாமல் விற்பனை செய்வது குற்றமாகும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முகக்கவசம், இலக்க வெப்பமானி, அறுவை சிகிச்சை கையுறைகள், பிபிஇ கிட், மருத்துவமனை படுக்கை, நோயாளி அணியும் ஆடை, கான்ட்டைக்ட் லென்ஸ், கிருமி நாசினி, தொடுசிகிச்சை கருவி (அக்குபஞ்சர் கிட்), நோயாளி எடை அளவு கருவி, குழந்தை படுக்கைகள், டீத்தர் கருவி, நெற்றியின் வெப்பநிலையை கண்டறியும் பட்டை, ஸ்டெரிலைசர், ஸ்ட்ரெச்சர்,  போர்செப்ஸ், வலியை குறைக்க பயன்படும் ஐஸ்பேக், ஓடுபொறி (ட்ரெட்மில்), எலக்ட்ரானிக் மசாஜர், செயற்கை விரல்/கட்டை விரல், கைகவண் ஆகியவைகள் தற்பொழுது  கிளாஸ் ஏ மற்றும் கிளாஸ் பி  மருத்துவ உபகரணங்களாகும்.

கிளாஸ் ஏ மற்றும் கிளாஸ் பி மருத்துவ உபகரணங்களின் முழுமையான பட்டியல் சிடிஎஸ்சிஓ இணையதளத்தில் (www.cdsco.gov.in)  வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்த மாநிலத்தில் உள்ள கிளாஸ் ஏ மற்றும் கிளாஸ் பி மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் சிடிஎஸ்சிஓ-ன் இணையதளம் (online portal) (www.cdscomdonline.gov.in) மூலம் உற்பத்தி உரிமத்தை பெற விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

11.08.2022 முதல் உரிய உரிமம் இல்லாமல் கிளாஸ் ஏ மற்றும் கிளாஸ் பி மருத்துவ  உபகரணங்களை தயாரிப்பது,  மருத்துவ  உபகரணங்கள் விதிகள் 2017-ன் படி குற்றமாகும் மேலும் 11.08.2022 முதல் உரிய மருந்து உரிமம் இல்லாமல் கிளாஸ் ஏ மற்றும் கிளாஸ் பி மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்வதும், மருத்துவ உபகரணங்கள் விதிகள் 2017-ன் படி குற்றமாகும். அதேபோல் உரிய தயாரிப்பு உரிமம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை  விற்பனை செய்வதும், மருத்துவ உபகரணங்கள் விதிகள் 2017-ன்படி குற்றமாகும்.

Tags : Tamilnadu , Don't sell mask, bb kit without license: Tamilnadu govt warning
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு