ஜம்மு காஷ்மீரில் போலீஸ் சாவடி மீது குண்டு வீசி தாக்குதல்: டிரோன் மீது துப்பாக்கிச்சூடு

ரம்பான்: ஜம்மு காஷ்மீரில் போலீஸ் சாவடி மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில் போலீசாரின் சோதனை சாவடி அமைந்துள்ளது. இதன் மீது நேற்று காலை தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். சோதனை சாவடியின் மேற்கூரை மீது குண்டு வீசப்பட்டதில், போலீசார் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீவிரவாதிகள் தாக்குதல் முயற்சியை தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு, ‘ஜம்மு காஷ்மீர் கஸ்னவி படை,’ என்ற புதிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஊடுருவிய டிரோன்: ஜம்மு காஷ்மீரின் கனாசாக் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு 9.35 மணியளவில் வானத்தில் ஒளியுடன் கூடிய பொருள் ஒன்று பறந்து வந்ததை கண்ட அவர்கள், அதை துப்பாக்கியால் சுட்டனர். இதைத் தொடர்ந்து, அந்த பறக்கும் பொருள் மாயமானது. அது அருகில் எங்காவது விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீரர்கள் தேடினர். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. அது பாகிஸ்தானுக்கு தப்பி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

Related Stories: