ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளில் பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று?.. மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி

டெல்லி: ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளில் பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று? என திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா; திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டிலேயே 70% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த உடன் பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு; பால் விலை ரூ.3 குறைத்துள்ளது. மதிய உணவு திட்டத்தையும் தாண்டி காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது.

நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டீர்களா? வாக்குறுதி கொடுத்தது போல ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்தீர்களா? மக்களை ஏமாற்றி தவறாக வழி நடத்தி உள்ளீர்கள். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் தருவோம் என கூறினீர்கள். ஆனால் இன்று வேலை வாய்ப்பின்மை தான் அதிகமாக நிலவுகிறது. பொருளாதாரம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. மின் மயானங்களின் மீது 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது அறிவுரைகளை கேட்டு செயல்படுவதே அரசுக்கு அழகு என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகை அளித்துவிட்டு பொதுமக்களை ஒன்றிய அரசு தண்டிக்கிறது. பண முடக்கம், ஜிஎஸ்டி மூலம் மக்களை ஏமாற்றும் திட்டத்தை தான் செயல்படுத்தி வருகிறது ஒன்றிய பாஜக அரசு. பெட்ரோலிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது, இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழைகளுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து ஒன்றிய அரசு செயல்பட வேண்டும். பிரதமர் மோடி அரசின் கொள்கைகளால் நாட்டுக்கே மோசமான காலம் வந்துவிட்டது.

Related Stories: