×

கோடியக்கரையில் பருவத்துக்கு ஏற்ப நிறம் மாறும் தில்லை மரத்தின் இலைகள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

வேதாரண்யம்: கோடியக்கரை பகுதியில் பருவத்துக்கு ஏற்ப நிறம் மாறும் தில்லை மரத்தின் இலைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பசுமைமாறா காட்டில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு புள்ளிமான், கலிமா, குதிரை, நரி, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. ராமர் பாதம் அருகே 150க்கு மேற்பட்ட மூலிகை செடிகள் அடங்கிய மூலிகை வனமும் உள்ளது.மேலும் கோடியக்கரை செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள சன்னாசி முனீஸ்வரன் கோயில் அருகே சாலையின் இருபுறங்களிலும் காணப்படும் தில்லை மரத்தின் இலைகள் வெவ்வேறு வண்ணத்தில் காணப்படும். இந்த மரத்தின் இலைகள் பல கலரில் மாறுவது குறிப்பிட்ட சில பருவத்திலும், சில நாட்களிலும் மட்டுமே. பின்னர் மீண்டும் பசுமைக்கு மாறி விடுகிறது. சுற்றுலா பயணிகளும், இயற்கை ஆர்வலர்களும் இந்த இயற்கை அழகினை சாலை வழியே செல்லும்போது நின்று, பார்த்து ரசித்துச் செல்லலாம்.

இது குறித்து கோடியக்கரை வனசரகர் அயூப்கான் கூறியதாவது:கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் முனியப்பன் ஏரி, பழைய லைட் ஹவுஸ் பகுதியில் காணப்படுகிறது.இந்த மரத்தின் இலைகள் ஆரம்பத்தில் பச்சை நிறமாகவும், தொடர்ந்து மஞ்சள், சிகப்பு என்று பல்வேறு நிறங்களாக மாறி உதிர்ந்து மீண்டும் பசுமை இலைகளாக உருவாகும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு மாத காலத்திற்குள் நடந்து முடிந்துவிடும். இந்த மாதம் முழுவதும் மட்டுமே இந்த நிறம் மாறும் காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

இந்த மரத்திலிருந்து வெளிப்படும் பால் விஷத்தன்மை உடையது. இந்த பாலானது உடலில் பட்டால் அரிப்புகள் உண்டாகி புண்கள் ஏற்படும். எனவே சுற்றுலாப் பயணிகள் இந்த மரத்தின் அழகை பார்த்து ரசித்தால் மட்டும் போதும். இலைகளை பறித்தோ அதிலுள்ள காய்களை பறித்தோ ஆபத்தை தேடிக் கொள்ளக் கூடாது என்றும், மேலும் இந்த தில்லை மரம் பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்க உதவும் மூலப் பொருளாகவும் உள்ளது என்றும் தெரிவித்தார்.

Tags : Kodiyakara , The leaves of the Thillai tree change color according to the season in Kodiakkarai: Tourists enjoy the sight
× RELATED கோடியக்கரையில் லட்சக்கணக்கில்...