அமலாக்கத்துறை அதிகாரியா? தன்னிச்சையாக செயல்படும் அமைப்பை பற்றி அண்ணாமலை எப்படி பேச முடியும்?.. அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

சென்னை: சென்னையில் நடைபெற்ற மின்வாரியத்துறை ரீதியான ஆய்வுக்கூடத்தில் பங்கேற்ற மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதும் சீரான மின் விநியோகம் நடைபெற முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மழை பெய்யக்கூடிய  மாநிலங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு மின்கம்பங்கள் சரிபார்க்கப்படுகின்றன. மின்சார வாரிய ஊழியர்கள் இரவு நேரத்திலும் விழிப்புடன் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் வாரியாக, மின்வாரிய உயர் அதிகாரிகள் இரவு நேரங்களிலும் சிறப்பு பணிகளில் ஈடுபட்டு சீரான மின் விநியோகம் வழங்குவதற்க்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட துணை மின் நிலையங்களை சரி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 10,77,910 பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் சீரான மின் விநியோகம் வழங்குவதற்க்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது. கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு மின்சாரத்துறை தயாராக உள்ளது. தற்போதைக்கு மின்கட்டண உயர்வில் மாற்றமில்லை. 1 கோடி மக்களுக்கு எந்த உயர்வும் இல்லை; சிலருக்கு மாதம் ரூ.27 தான் உயர்வு; இது பெரிய பாதிப்பு இல்லை. மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை வெளியிட இயலாது.

அமைச்சராக பதவி ஏற்கும் போது சத்தியபிரமாணம் செய்துள்ளேன். இது வெளிப்படைத் தன்மையான ஆவணங்கள் அல்ல. ஒன்றிய அரசு எவ்வளவு டாலருக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய கூறியுள்ளது என தெரிவிக்க வேண்டும். மின்சாராத்துறையின் நிலுவைத் தொகை விரைவில் செலுத்தப்படும். இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் குறைந்த விலைக்கு நிலக்கரி கொள்முதல் செய்கிறது. அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவது தெரிகிறது என அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்தார். முன்னதாக செந்தில்பாலாஜி மீது விரைவில் அமலாக்கத்துறை நடவடிக்கை என அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். அமலாக்கத்துறை அதிகாரியா அண்ணாமலை? தன்னிச்சையாக செயல்படும் அமலாக்கத்துறை அமைப்பை பற்றி அண்ணாமலை எப்படி பேச முடியும்? எனவும் கேள்வி எழுப்பினார்.

ஒரு அரசியல் கட்சி அமலாக்கத்துறையை எப்படி பயன்படுத்துகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுவதிலேயே தெரிகிறது. அரசின் மீது அவதூறு பரப்புவது ஏற்புடையது அல்ல. அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் எதுவும் ஏற்புடையது அல்ல. ஆவணங்கள் இருந்தால் அண்ணாமலை கொடுக்கட்டும் பதில் கூறுகிறேன். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து தமிழக பாஜக போராட்டம் நடத்தாது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

Related Stories: