கனமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் கல்லட்டி நீர்வீழ்ச்சி: கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி: ஊட்டி - மசினகுடி மலைப்பாதையில் உள்ள கல்லட்டி அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு  ரசித்து வருகின்றனர்.ஊட்டியில் இருந்து மசினகுடி பகுதிக்கு செல்ல கல்லட்டி மலை பாதை உள்ளது. ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக மைசூர் செல்வதை காட்டிலும் மசினகுடி - கல்லட்டி வழியாக செல்வதால் நேரம் மற்றும் தூரம் குறைவு என்பதால் இச்சாலையை பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பயன்படுத்துகின்றனர். இச்சாலையில் விபத்துகள் அதிகம் நடப்பதால் தற்போது ஊட்டியில் இருந்து கல்லட்டி வழியாக கீழ் நோக்கி செல்ல சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. உள்ளூர் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

மசினகுடியில் இருந்து ஊட்டி நோக்கி வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த மலை பாதையில் 15 கொண்டை ஊசி வளைவில் கல்லட்டி பகுதியில் அருவி உள்ளது. நீலகிரி வனக் கோட்டத்திற்குட்பட்ட சோலூர், காமராஜ் சாகர் அணை மற்றும் தலைகுந்தா பகுதியில் மழை பெய்தால் இந்த நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும். வனப்பகுதிக்கு நடுவே அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவது தொலைவில் இருந்து பார்க்கும் போது ரம்மியமாக இருக்கும். இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பார்கள். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, ஊட்டி, கூடலூர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, தலைக்குந்தா, சோலூர் பகுதிகளில் உள்ள நீரோடைகள் வழியாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கல்லட்டி அருவியில் கொட்டி வருகிறது. மேலும், மழை காரணமாக வனங்களும் பசுமையாக காட்சியளிப்பதால் தொலைவில் இருந்து பார்க்கும் போது வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் நீர் கொட்டி வருகிறது. தொலைவில் இருந்து பார்க்கும் போது மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதனை ஊட்டி நோக்கி வர கூடிய சுற்றுலா பார்த்து ரசித்து செல்கின்றனர். இதேபோன்று அருகில் பல இடங்களில் உள்ள சிறு, சிறு அருவிகளிலும் நீர் கொட்டி வருகிறது.

Related Stories: