பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை: இரு தரப்பு மீனவர்கள் இடையே தள்ளுமுள்ளு

பொன்னேரி: பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும் போதே  இரு தரப்பு மீனவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் ஆண்டிகுப்பம், நடுவூர், மாதாகுப்பம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இவர்கள் ஏரியில் மட்டுமே மீன்பிடி தொழில் செய்யும் நிலையில் கடலில் மீன்பிடிக்க செல்வது கிடையாது. இதே போல குணாங்குப்பம் மீனவர்கள் கடலில் மீன்பிடி தொழில் செய்து வரும் நிலையில் இவர்கள் ஏரியில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இறால் நண்டு ஆகியவற்றை பிடிப்பதால் மற்றொரு தரப்பினர் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினர் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இரு தரப்பு கருத்துக்களை கேட்ட கோட்டாட்சியர் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக மீனவர்களிடம் தெரிவித்தனர். ஆனால்  இதனை ஏற்காத ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கொண்டே கூட்டத்தில் இருந்து அலுவலகத்தின் வெளியே வந்தனர். அப்போது இரு தரப்பினரும் தள்ளுமுள்ளு-வில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தி தனித்தனியே அனுப்பி வைத்தனர். அமைதி பேச்சு வார்த்தைக்கு வந்த மீனவர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Related Stories: