×

ஆம்புலன்சுக்கு பணம் கொடுக்க முடியாததால் தாயின் சடலத்தை பைக்கில் கட்டி எடுத்து சென்ற மகன்: மத்திய பிரதேசத்தில் அவலம்

போபால்: மத்திய பிரதேசத்தில் தாயின் உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல வாகனம் கிடைக்காததால், அவரது மகன் தாயின் உடலை பைக்கில் கட்டி வைத்து எடுத்து சென்ற வீடியோ வைரலாகிறது. மத்திய பிரதேச மாநிலம் ஷாஹோல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை உடல்நலம் பாதிக்கப்பட்ட 60 வயதான தாயை, அவரது மகன் சுந்தர் யாதவ் அட்மிட் ெசய்தார். ஆனால் அவரது தாய் சிகிச்சை பலனின்றி இறந்தார். எனவே தனது தாயின் உடலை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸ் வாகனம்  கேட்டுள்ளார்.

அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சடலத்தை எடுத்து செல்ல ரூ. 5,000 கேட்டுள்ளனர். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லாததால், தனது தாயை அவரது பைக்கின் பின்புற இருக்கையில் படுக்க வைத்த வாக்கில் துணிகளை போட்டு சுற்றிவைத்து எடுத்து சென்றார். கிட்டதட்ட 80 கிலோ மீட்டர் தூரம் பைக்கிலேயே தனது கிராமத்திற்கு தாயின் உடலை கொண்டு சென்றுள்ளார். சுந்தர் யாதவ் தாயின் உடலை ைபக்கில் சுமந்து செல்லும்  காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

மாநில அரசின் அலட்சியத்தால், ெபாதுமக்கள் இவ்வாறான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘இறந்த தாயின் சடலத்தை எடுத்து செல்ல அந்த இளைஞர் வாகனம்  கேட்கவில்லை. மேலும், சடலத்தை எடுத்துச் செல்ல மருத்துவமனையில் வாகன வசதி இல்லை’  என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Madhya Pradesh , Ambulance, son carrying mother's dead body on bike, Madhya Pradesh,
× RELATED விபத்தில் லாரி எரிந்து கொண்டிருந்த...