×

மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஸ்பெயின் நாட்டு பெண் நடுவர் திடீரென மயங்கியதால் பரபரப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நடந்து  வரும்  44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில்  நடுவராக  இருந்த ஸ்பெயின் நாட்டு பெண் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரத்தில் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த 28ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 186 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். செஸ் போட்டி தொடக்க நாளில் இருந்து இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, ஏ, பி மற்றும் சி ஆண்கள் பிரிவில் இடம்பெற்ற தமிழக வீரர்கள் தொடர்ந்து வெற்றிகளை குவித்து இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 4வது நாளாக 3 மணிக்கு போட்டி தொடங்கியது. 186 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் போட்டி நடைபெறும் பகுதிக்கு வந்து, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்தனர். மதியம் சரியாக 3 மணிக்கு போட்டி தொடங்கியதும், 22 சதுர அடியில் பழைய அரங்கத்தில் நடுவராக இருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மார்டினெஸ் ஹெர்னாண்டஸ் நோமி என்ற பெண் திடீரென மயங்கி விழுந்தார்.  இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே மருத்துவ குழுவினர் விரைந்து வந்து   அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, தங்கும் விடுதிக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மருத்துவ குழுவினர் கூறுகையில், “செஸ் போட்டி முதல் அரங்கில் நடுவராக பணியாற்றிய  வெளிநாட்டு பெண் திடீரென மயங்கி விழுந்து விட்டார். அவருக்கு உடனடியாக முதலுவி சிகிச்சை அளித்து பத்திரமாக தங்கும் விடுதிக்கு அனுப்பியுள்ளோம்.  தற்போது அவர் நலமாக இருக்கிறார். பதற்றம் காரணமாக திடீரென மயங்கி விழுந்துள்ளார்” என்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : 44th Chess Olympiad match ,Mamallapura , Mamallapuram, Chess Olympiad, Spanish Woman Referee
× RELATED மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம்...