×

57 அடியில்... 55 அடியை தொட்டது மஞ்சளாறு கரையோர மக்களுக்கு இறுதி கட்ட வெள்ள எச்சரிக்கை: சோத்துப்பாறை கரை மக்களுக்கு முதல்கட்ட வெள்ள எச்சரிக்கை

தேவதானப்பட்டி: தொடர் மழை காரணமாக நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் மஞ்சளாறு அணை கரையோர மக்களுக்கு இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், சோத்துப்பாறை அணை கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் மொத்த உயரம் 57 அடியாகும். அதன் மொத்த கொள்ளளவு 487.35 மி கனஅடியாகும். கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு சீரான நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று மாலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு வினாடிக்கு 276 கனஅடி நீர் வந்தது. நேற்று இரவு 9 மணிக்கு அணை 55 அடியை எட்டியதால் அணைக்கு வரும் 276 கனஅடி தண்ணீரை அப்படியே உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. தற்போது அணை 55 அடியும், மொத்த கொள்ளளவு 435.32 மி கனஅடியாகவும் உள்ளது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மஞ்சளாறு ஆற்றங்கரையோர தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, தும்மலப்பட்டி, வத்தலக்குண்டு, குன்னுவாரன்கோட்டை, செக்காபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மூன்றாம் கட்ட மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

*சோத்துப்பாறையில் முதல் கட்ட எச்சரிக்கை
பெரியகுளம் அருகேயுள்ளது சோத்துப்பாறை அணை. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் நேற்று காலை 8 மணியளவில் 121 அடியை எட்டியது.
இதை தொடர்ந்து வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை பெரியகுளம் பொதுப்பணி துறையினர் விடுத்துள்ளனர்.
மேலும் அணைக்கு நீர் வரத்தானது 140 கன அடியாக உள்ளது. தொடர் கனமழை பெய்தால் அணையின் முழு கொள்ளளவான 126.28 எட்டும் நிலையில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையில் இருந்து வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படும் என பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Manchalaru ,Sothupparai , At 57 feet... Touched 55 feet Final flood warning for Manchalara coastal people: First stage flood warning for Sothupparai coastal people
× RELATED சாலை வசதி செய்துத்தரகோரி தேனியில் 10 கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம்..!!