×

காதல் மனைவியை கொடூரமாக கொன்ற மதனிடம் விசாரணை நடத்த நாளை ஆந்திர போலீசார் சென்னை வருகை: பகீர் தகவல் வெளியாக வாய்ப்பு?

புழல்: காதல் மனைவியை கொடூரமாக குத்திக்கொன்ற மதனிடம் விசாரணை நடத்த ஆந்திர போலீசார், செங்குன்றத்துக்கு நாளை வருகை தருகின்றனர். அவரிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். சென்னை புழல் கதிர்வேடு ஜான்விக்டர் தெருவை சேர்ந்த தம்பதி மாணிக்கம், பால்கிஸ். இவர்களின் மகள் தமிழ்ச்செல்வி (19). இவர் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 8வது தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மதன் (19) என்பவரை காதலித்து கடந்த சில மாதத்துக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து இருவரும் பாடியநல்லூர் ஜோதி நகரில் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் தமிழ்ச்செல்வியின் செல்போனில் அவரது பெற்றோர் தொடர்பு கொண்டபோது தொடர்பு கிடைக்கவில்லை. இதனால் அவரது தாய், நேராக பாடியநல்லூர் சென்று பார்த்தபோது மகள் வீட்டில் இல்லை என்று தெரிந்தது. இதன்பிறகு மகள், மருமகன் ஆகியோரது செல்போனுக்கு தொடர்புகொண்டபோதும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இதனால் அவர்களை பல இடங்களில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து தமிழ்ச்செல்வி காணவில்லை என்று செங்குன்றம் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் கொடுத்தனர். சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில், மதனை பிடித்து செங்குன்றம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில், ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனே அருவிக்கு சென்றபோது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மனைவி தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்திவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து மதனை அழைத்துக்கொண்டு கோனே அருவிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியும் தமிழ்ச்செல்வியை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இதையடுத்து மீண்டும் மதனை செங்குன்றத்துக்கு அழைத்துவந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே கோனே அருவியில் மசாஜ் செய்யும் பணியாளர்கள் கொடுத்த தகவல்படி, நாராயணவனம் பகுதியில் உள்ள பாறையில் ஆந்திர போலீசார் சோதனை நடத்தியபோது, ஒரு செருப்பு மற்றும் சுடிதார் கிடந்தது. இதன் அடிப்படையில், அங்குள்ள பாறை  இடுக்கில் கிடந்த தமிழ்ச்செல்வியின் சடலத்தை எலும்புக்கூடாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கொல்லப்பட்டது தமிழ்ச்செல்விதான் என்று அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தினர்.

சம்பவம் நடைபெற்ற பகுதி ஆந்திர மாநிலம் நாராயணவனம் காவல் எல்லைக்கு உட்பட்டது என்பதால் இவ்வழக்கை அந்த போலீசார்தான் விசாரிக்க வேண்டும். இதனால் தமிழ்ச்செல்வி மரணம் தொடர்பாக மதனிடம் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளதால் ஆந்திரா போலீசார் நாளை செங்குன்றம் வருகின்றனர். இங்கிருந்து மதனை அழைத்துச்சென்று தீவிரமாக விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

‘’பிரேத பரிசோதனை அறிக்கை வருவதற்கு இன்னும் ஒருவாரம் ஆகும். இதன்பிறகுதான் இறந்தது தமிழ்ச்செல்விதானா என்று உறுதிப்படும். இதன்பிறகு மதனிடம் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். தற்போது மதனுக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்தது ஆந்திரா என்பதால் அங்குள்ள போலீசாரிடம் நாளை மதனை ஒப்படைக்க உள்ளோம்’ என்று செங்குன்றம் போலீசார் தெரிவித்தனர்.

Tags : Andhra Police ,Chennai ,Madan ,Bagheer , Love Wife, Brutal Murder, Investigation, Andhra Police,
× RELATED மூதாட்டியை கொன்றவருக்கு வலை தனிப்படை...