மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைப்பு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த, கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13ம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கிருத்திகா உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே மாணவி ஸ்ரீமதியின் இறப்பில் பெற்றோர் தரப்பில் சந்தேகம் எழுப்பி இருந்தனர். இரு முறை பிரேத பரிசோதனை செய்த பின்னரும் அவர்கள் திருப்தியடையவில்லை. இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஜிப்மர் மருத்துவ குழுவினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி மாணவியின் உடலை 2 முறை பிரேத பரிசோதனை செய்த அறிக்கையை நேற்று விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற அறிவுரையின்படி இந்த பிரேத பரிசோதனை அறிக்கையை ஜிப்மர் மருத்துவக்குழுவினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இக் குழுவினர் தங்கள் ஆய்வை தொடங்க உள்ளனர். இக்குழுவினர் முழுமையாக ஆய்வு செய்த பிறகு தங்கள் ஆய்வறிக்கையை ஒரு மாதத்திற்குள் விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல் செய்வார்கள்.

Related Stories: