திருப்பூர் பகுதி அரிசி ஆலைகள், வியாபாரிகள் புதிய உத்தி: விதிகளுக்கு உட்பட்டே 26 கிலோ அரிசிப் பை தயாரிப்பதாக தகவல்....

திருப்பூர் : சமீபத்தில் நடந்த 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஒன்றிய அரசு அரிசி மீது 5 சதவிதம் வரி விதித்தது. இதனை, திருப்பூர் பகுதி அரிசி வியாபாரிகள் புதுமையான முறையில் எதிர் கொண்டு வருகின்றனர். திருப்பூர் பகுதி அரிசி ஆலைகள் இப்போது 25 கிலோ பைக்கு பதிலாக 26 கிலோ அரிசி பையாக தயாரிக்கின்றனர். ஏனெனில், 25 கிலோ வரையிலான அடைக்கப்பட்ட பிராண்ட் மற்றும்  நான் பிராண்ட் அரிசிக்குதான் 5 சதவித வரி விதிப்பு உள்ளது. முன்பு நுகர்வோருக்கு 1000 ரூபாய்க்கு விற்கப்பட்ட 25 கிலோ அரிசி பேக்கிங் வரி விதிப்பிற்கு பிறகு 50 ரூபாய் உயர்ந்து 1050 ரூபாய்க்கு விற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய முயற்சியாக 26 கிலோ அரிசி பேக்கிங் விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளது.

உணவுத்துறை உயர் அதிகாரியுடன் பேசிய பின்பே 26 கிலோ பேக்கிங்கை நடைமுறைக்கு கொண்டு வந்திருப்பதாக அரிசி ஆலை அதிபர்கள் மற்றும் வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும், 26 கிலோ அரிசி பேக்கிங் செய்யும் போது மக்களுக்கு 50 ரூபாய் குறைவாக கொடுக்க முடியும் என்கின்றனர் வியாபாரிகள். முன்பு எல்.எம்.ஏ எனப்படும் லீகல் மெட்ரோலஜி ஆக்ட் விதிகளின் படி 5 கிலோ எடை கொண்ட பேக்கிங் தான் செய்ய வேண்டும் என்ற நிலையிருந்தது. ஆனால், தற்போது அந்த ஷரத் ரத்து செய்யப்பட்டு ஜி.எஸ்.டி விதிகளின் படி 25 கிலோவிற்கு மேல் செல்லும்போது வரிக்கு உட்படுத்த தேவையில்லை. இருப்பினும், பெரும்பாலும் 5 கிலோ, 10 கிலோ பேக்கிங் வாங்கும் நிலையில் உள்ள நுகர்வோரிடம் ஜி.எஸ்.டி வரி வசூல் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

Related Stories: