×

“ஒன்றிய அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்களை பழிவாங்கவே புலனாய்வு அமைப்புகளை அரசு பயன்படுத்துகிறது' : முரசொலி காட்டம்!!


சென்னை : சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் திட்டமிட்டே பழிவாங்கப்படுகின்றனர் என்று முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.

பழிவாங்கவே அமைப்புகள்? என்ற தலைப்பில் இன்று வெளியாகி உள்ள கட்டுரை :

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது அமலாக்கத் துறை. ’’சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு சிலரை அவமானப்படுத்தும் சம்பவம் இது. நிதி மோசடி தடுப்புச் சட்டமானது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று காங்கிரசுக் கட்சி குற்றம் சாட்டுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத், ‘‘எதிர்த்தரப்பு அரசியல் தலைவர்களை எதிரிகளாக நடத்தக் கூடாது. சோனியா காந்தியிடம் தொடர்ந்து பல நாட்களாக விசாரணை நடத்துவதற்கு முன்பு அவரது வயதையும் உடல் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு இருந்தார்.

அவரால் விசாரணை அமைப்புகளின் அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ள இயலாது. போர்க் காலத்தில் கூட பெண்களைத் துன்புறுத்தக் கூடாது என்று மன்னர்கள் உத்தரவிடுவார்கள். வயதான மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட சோனியாவிடம் விசாரணை அமைப்புகள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது” என்று கூறினார்.

அரசியல் உள்நோக்கத்துடன் புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப் படுவதையே சோனியா மீதான விசாரணை காட்டுகிறது. புலனாய்வு அமைப்புகளை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மக்கள் விரோத, விவசாயிகள் விரோத ஒன்றிய அரசைக் கண்டித்து போராட்டங்களை தீவிரப்படுத்தவும் எதிர்க் கட்சிகள் முடிவு செய்துள்ளன. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒன்றிய அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது.

இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க சார்பில் மக்களவை தி.மு.க குழு துணைத் தலைவர் கனிமொழி கலந்து கொண்டார். தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், புலனாய்வு அமைப்புகளை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுவரை இல்லாத வகையில் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களை குறிவைத்து புலனாய்வு அமைப்புகள் மூலம் ஒன்றிய அரசு துன்புறுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ஒன்றிய அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து போராட்டத்தை தீவிரப்படுத்தவும் எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். 2014க்குப்பிறகு 3,555 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், சட்டம் அமலுக்கு வந்த 2005 முதல் இன்று வரை 23 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றும் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு எழுத்து மூலம் பதில் அளித்துள்ளது.

முறைகேடான பணபரிமாற்ற சட்டம் 2005 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதுவரை 5,422 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 3,555 வழக்குகள் 2014 க்குப் பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளன. 1.04 லட்சம் கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ஆனால், 992 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 869 கோடி முறைகேடு வழக்கில் 23 பேர் தண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவை பா.ஜ.க. அரசு தந்துள்ள புள்ளி விபரம்தான்.

‘வேட்டையாடப்படும் அரசியல் எதிரிகள் - புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றனவா?’ என்ற கட்டுரையில் ஜூனியர் விகடன் - இதழ் இதுவரை நடவடிக்கைக்குள்ளானோரின் அரசியல் உள்நோக்கங்களை விவரித்துள்ளது.

* பா.ஜ.க. அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மீது அதிகமான விமர்சனம் வைத்து வந்த ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு நூறு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கிறார்.

* பா.ஜ.க.வையும், ஒன்றிய அரசையும் கடுமையாக விமர்சிக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் குறிவைக்கப்படுகிறது. அக்கட்சியின் பிரமுகரான அபிஷேக் பானர்ஜி, ‘‘நாங்கள் எப்போது கோவா மாநில அரசியலில் எப்போது தலையிடத் தொடங்கினோமோ அது முதல் பத்து முறை என்னிடம் விசாரணை நடத்திவிட்டார்கள்” என்று சொல்லி இருக்கிறார்.

* குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியதற்காக அசாம் மாநிலத்தில் அகில் கோகோய் கைது செய்யப்பட்டார். அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இறுதியாக அவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ‘என்.ஐ.ஏ.வை தவறாக பயன்படுத்துகிறார்கள்’ என்று அவர் குற்றம் சாட்டினார்.

* 2002 குஜராத் வன்முறைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்த தீஸ்தா சீதல்வாட் கைது.

* பீமா கோரேகான் வழக்கில் ஆனந்த் டெல்டும்டே கைது - ஆகியவையும் அரசியல் கைதுகளாகவே விமர்சிக்கப்படுகிறது.

* இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் சிவசேனா எம்.பி.சஞ்சய் ரெளத் கைது செய்யப்பட்டுள்ளார். சிவசேனா கட்சியின் முகமாக இருப்பவர் அவர். அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கானது போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் ரெளத், ‘‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக குறி வைக்கப்பட்டுள்ளேன். மறைந்த பால்தாக்கரே மீது சத்தியமாக நான் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை. உயிரே போனாலும் சிவசேனாவில் இருந்து விலக மாட்டேன்” என்று சொல்லி இருக்கிறார்.

சிவசேனாவில் இருந்து தன்னை வெளியே கொண்டு வருவதற்கான சதியாகத் தான் இதனை அவர் பார்க்கிறார். இவை அனைத்தும் புலனாய்வு அமைப்புகளுக்கு பெருமை சேர்ப்பதாக ஆகாது. ஒன்றிய அரசு சரிசெய்ய வேண்டிய அவசியப் பிரச்சினைகள் எத்தனையோ இருக்கின்றன. அதனைச் சரிசெய்யாமல் திசை திருப்புவதற்காக இவை நடத்தப்படுகின்றன.

Tags : Murasoli Gotam , Policy, blame, analysis, structure, rhetoric
× RELATED தென் மாநிலங்களில் பாஜக நோட்டா விற்கு...