×

ஒசாமா பின்லேடனுக்கு பிறகு அல்கொய்தா அமைப்பை வழி நடத்திய அய்மான் அல் ஜவாஹிரி கொலை செய்யப்பட்டார் : அதிபர் ஜோபிடன் அறிவிப்பு!!

வாஷிங்டன் : நியூயார்க் உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தி உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 11 2001ம் ஆண்டில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம்  பாகிஸ்தானில் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றது. அதற்கு பிறகு அந்த அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த அய்மான் அல் ஜவாஹிரியை தீவிரவாதிகள் பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது. அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்த சிஐஏ உளவு அமைப்பு, பல முறை அவர் மீது தாக்குதல் நடத்தி கொல்ல முயன்றது.

தற்போது ஆப்கானிஸ்தானில் தமது குடும்பத்தினருடன் ரகசியமாக வாழ்ந்து வந்த அவரை ஆளில்லா விமானம் மூலம் தாக்கி கொன்றதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் அறிவித்துள்ளார். ஜவாஹிரி குடும்பத்தினர் யாருக்கும் சேதம் ஏற்படாமல் வான்வழி தாக்குதல் வெற்றிகரமாக முடிந்ததாக அதிபர் ஜோபிடன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அதிபர் ஜோபிடன், அதிபர் புஷ், அதிபர் ஒபாமா, அதிபர் டிரம்ப் ஆட்சி காலத்தில் ஜவாஹிரியை அமெரிக்கா தேடி வந்தது. அவரது நடமாட்டத்தை அமெரிக்க உளவு அமைப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் உறுதி செய்தது. காபூல் நகரில் அவரது குடும்பத்தினருடன் உடன் ஜவாஹிரி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இருப்பதை உறுதி செய்த பிறகு ஜவாஹிரியை தாக்கி கொல்ல நான் அனுமதி அளித்தேன். இதில் பொதுமக்களுக்கு காயம் ஏற்படாமல் திட்டத்தை செயல்படுத்தினோம்,என்றார்.

ஒசாமா பின்லேடனுக்கு நெருங்கிய தொடர்புடைய ஜவாஹிரியை அதி முக்கிய பயங்கரவாதி பட்டியலில் இணைத்து இருந்த அமெரிக்க அரசு, கடந்த 2011ம் ஆண்டில் இருந்து தேடி வந்தது. 1993ம் ஆண்டு ஜவாஹிரி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு நிதி திரட்டினார். சோவியத் ரஷ்யா நடத்திய போரில் காயம் அடைந்த ஆப்கன் நாட்டு குழந்தைகளுக்கு அவர் நிதி திரட்டியதாக கூறப்பட்டது. மருத்துவரான ஜவாஹிரி ஒசாமா பின்லேடனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர். 4 திருமணங்கள் செய்து கொண்ட ஜவாஹிரி உயிருக்கு     
அச்சுறுத்தல் இருந்ததால் அவர் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.


Tags : Ayman Al Jawahiri ,Algoida Organization ,Osama Finladen ,President ,Jobiden , Osama, bin Laden, Al Qaeda, Ayman al -Jawahiri
× RELATED கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர்...