எம்டிசி பேருந்து இயக்கத்தை அறிந்திட உதவும் சென்னை பஸ் செயலி மூலம் 1.10 லட்சம் பயணிகள் பயன்; எம்டிசி அதிகாரி தகவல்

சென்னை: எம்டிசி பேருந்துகளின் இயக்கத்தை பொதுமக்கள் அறிந்திட உதவும் ‘சென்னை பஸ்’என்ற செயலியை இதுவரை 1.10 லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர் என மாநகர் போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 3,454 பேருந்துகள் உள்ளன. இந்த பேருந்துகளில், சென்னை மற்றும் சுற்றியுள்ள அண்டை மாவட்டங்களுக்கு  602 வழித்தடங்களில், 6,026 பேருந்து நிறுத்தங்களில் நின்றும் செல்லும்  வகையில், 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் தினமும் சுமார் 27.58 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இவர்களின் வசதிக்காக ‘சென்னை பஸ்’ என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த மே முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் நுண்ணறிவு போக்குவரத்து  மேலாண்மை அமைப்பில் (ஐடிஎஸ்) மேம்படுத்தப்பட்ட நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயங்கும் இடத்தை பொதுமக்கள் அறிய முடியும். இதில்  பேருந்துகள் வருகை நேரம், வந்துகொண்டிருக்கும் இடம் ஆகியவற்றை  கைபேசியில் தெரியும்படி, தானியங்கி வாகன இருப்பிடம்  உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநகர் போக்கரத்துக் கழகத்தில் உள்ள  3,454 பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இது மாநகர் போக்குவரத்துக்கழக பேருந்துகளை பயன்படுத்துவோருக்கு, குறிப்பாக வெளியூர்களில் இருந்து வருவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி 1.10 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘எம்டிசி பஸ்களின் இருப்பிடத்தை கண்டறியும் வகையில் சென்னை பஸ் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இது பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 1.10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும் பலர் தொடர்ந்து பதிவிறக்கம் செய்து வருகின்றனர்’என்றார். பயணிகள் கூறுகையில்,‘இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம், மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் உரிய நேரத்தில் பயணம் செய்து, சென்னை புறநகர் ரயில் நிலையம், சென்னை மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று எங்களது பயணத்தினை மேற்கொள்ள எளிதாக உள்ளது. இந்த செயலியின் மூலம், சென்னை நகரத்திற்கு புதிதாக வருகை தரும் மக்கள், தங்கள் இருப்பிடத்தின் அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம், அந்த நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருக்கும் பேருந்துகளின் விவரம் ஆகியவற்றை எளிதாக அறிய முடிகிறது.

Related Stories: