×

வெள்ளானூர் ஊராட்சியில் ஆகாய தாமரை, கழிவுநீரால் துர்நாற்றம் வீசும் குளம்

ஆவடி: வெள்ளானூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே ஆகாய தாமரைகள் மற்றும் பாசி படர்ந்துள்ளதால் பொது குளம் சுத்தமின்றி காணப்படுகிறது. குளத்தை தூர்வாரி சீரமைத்து குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். ஆவடி அருகே வெள்ளானூர் ஊராட்சி அலுவலகம் எதிரே பொது குளம் உள்ளது. இக்குளத்தின் நீரை நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் குடிநீருக்கு பயன்படுத்தி வருகின்றனர். நாளடைவில் இக்குளத்தில் கழிவுநீர் திறந்து விடப்பட்டது. மேலும், குப்பை கழிவுகளும் கொட்டப்பட்டன. இதனால் முறையான பராமரிப்பின்றி ஆகாய தாமரை மற்றும் பாசிககள் படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது.

மேலும், குளத்தை சுற்றி 3 பக்கங்களிலும் சிமென்ட் மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்ட நீர்வரத்து கால்வாய்கள் தூர்ந்த நிலையில் உள்ளன. இதனால் குளத்துக்கு மழைநீர் வரவும், வெளியேறவும் வழியின்றி பாழடைந்துள்ளன. கரையோரங்களில் ஏராளமான சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் குளத்தின் நீரை பயன்படுத்த முடியாமல் குடிநீருக்கு மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, குளத்தை உடனடியாக தூர்வாரி சீரமைத்து, மீண்டும் குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Agaya Tamarai ,Vellanoor Panchayat , Agaya Tamarai in Vellanoor Panchayat, a pond that stinks due to sewage
× RELATED வெள்ளானூர் ஊராட்சியில் கிடப்பில் போடப்பட்ட மழைநீர் கால்வாய் பணி