ரூ. 200 கோடியில் புதிதாக அமைக்கப்படும் திருவொற்றியூர் மீன்பிடி துறைமுகம்; 7 மாதத்தில் திறப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் ரூ. 200 கோடியில் புதிய மீன்பிடி துறைமுக பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, 7 மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும், என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருவெற்றியூர், எண்ணூர் மற்றும் காசிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் விசைப்படகு, பைபர் படகு, மோட்டார் பொருத்தப்பட்ட கட்டுமரம் ஆகியவற்றின் மூலம் கரையோரம் முதல் ஆழ்கடல் வரை சென்று சூரை மீன், வஞ்சிரம், சுறா, வவ்வால், கொடுவா, சங்கரா, இறால், கடம்பா, நண்டு உள்பட பல்வேறு வகையான மீன்களை பிடித்து வருகின்றனர். இதனை உள்ளூரில் விற்பனை செய்வதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இவ்வாறு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் சுமார் 2000க்கும் மேற்பட்ட படகுகள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் கடலுக்கு சென்று வருகின்றன.

இந்த படகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இட நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மீன்பிடி தொழில் மேம்பாடு தடைபடுகிறது. இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிலவி வரும் நெரிசலை குறைக்கவும், சூரை மீன், இறால் உள்ளிட்ட ஆழ்கடல் மீன்பிடி தொழிலை மேம்படுத்தவும் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, திருவொற்றியூர் பட்டினத்தார்கோவில் குப்பம் அருகே ரூ. 200 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க கடந்த 2019ம் ஆண்டு திட்டமிடப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன. 68 ஏக்கர் பரப்பளவில் 849 மீட்டர் நீளம், தெற்கு அலை தடுப்பு சுவர், 550 மீட்டர் நீளம் வடக்கு அலை தடுப்புச் சுவர், 550 மீட்டர் நீளம் பெரிய மற்றும் சிறிய படகு தளம், 550 மீட்டர் நீளம் தடுப்புச் சுவர், 163 சதுர மீட்டர் மீன்பிடி துறை நிர்வாக கட்டிடம், 258 சதுர மீட்டர் வலை பின்னும் கூடம், 300 சதுர மீட்டர் சிறுமீன்கள் ஏலக்கூடம், 765 சதுர மீட்டர் ஆழ் கடல் மீன் ஏல விற்பனைக் கூடம், இவற்றுடன் 60,000 டன் மீன்களை கையாளும் வகையிலும் சுமார் 500 விசைப் படகுகள், 300 சிறிய வகை படகுகள் நிறுத்தும் வசதியுடன் கட்டுமான பணி  நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த மீன்பிடி துறைமுகத்தில் அலுவலகம், தங்கும் விடுதி, உணவு விடுதி, மீன் விற்பனை கூடம், படகு பழுது பார்க்கும் தளம், மீன்கள் பதப்படுத்தும் கூடம், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆண், பெண் கழிப்பறை வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளதால் திருவொற்றியூர் நகரம் மீன் சந்தையின் முக்கிய நகரமாக விளங்க உள்ளது. மேலும், மழை, புயல் மற்றும் இயற்கை சீற்றத்தின் போது மீனவர்கள் பாதுகாக்க வானொலி தொடர்பு கோபுரம் அமைக்க படுகிறது. இதுகுறித்து மீன்வளத்துறை திட்ட அதிகாரிகள் கூறுகையில்,‘‘திருவொற்றியூரில் அமைய உள்ள இந்த மீன்பிடி துறைமுகத்தின் மூலம் மீன்பிடி தொழில் மேம்படுவதோடு சூரை மீன் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் ஆண்டிற்கு சுமார் ரூ. 150 கோடி அளவிற்கு வருவாய் அதிகரிக்கும்.

மேலும் இதன் மூலம் படிப்படியாக சுமார் 10,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும் மீன்பிடித் தொழில் வசதிக்காக எதிர்காலத்தில் ஐஸ் தலம் போன்ற நவீன வசதிகள் இங்கு கொண்டு வரப்படும். நீர் தொடர்பான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் கட்டிட கட்டுமான பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் விரைவாக முடிக்கப்பட்டு 2023ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த மீன்பிடி துறைமுகம் செயல்பாட்டிற்கு வரும், என்றனர்.

Related Stories: