×

ஊத்துக்கோட்டை அருகே ரூ. 40 லட்சம் மதிப்புள்ள மின்சார காப்பர் வயர் திருட்டு வழக்கில்; இருவர் கைது முக்கிய குற்றவாளிகளுக்கு வலை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே ரூ. 40 லட்சம் மதிப்புள்ள  மின்சார காப்பர் வயர் திருட்டு புகார் வழக்கில், 12 மணி நேரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை அருகே சீத்தஞ்சேரி அடுத்த குஞ்சலம் கிராம  பகுதியில் மின்சார துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 25 தேதி அதிகாலை 3.30 மணியளவில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள  4. 1/2  டன் மின்சார டிரான்ஸ் பார்மரில் பயன்படுத்தக்கூடிய  காப்பர் வயர் மற்றும் உதிரி பாகங்களை  மினி லாரியில் வைத்து மர்ம நபர்கள் திருடிச்  சென்றுள்ளனர்.  இது குறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் பென்னலூர் பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 30 தேதி புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சிறப்பு எஸ்.ஐ.மாதவன் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனை தொடந்து, தகவல் அறிந்த  திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சேப்பஸ் கல்யாண் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.  பின்னர் ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் குற்றபிரிவு போலீசார் பகதூர்,  செல்வராஜ், லோகநாதன் ஆகியோர் கொண்ட  தனிபடை அமைத்து  காப்பர் வயரை மினி லாரியில்  திருடி சென்ற  மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர் . இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பென்னலூர்பேட்டை அடுத்த ராமலிங்காபுரம் போலீஸ் சோதனைச்சாவடியில் தீவிர வாகன தணிக்கையில், இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் தனிபடையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில் மினி லாரி ஒன்றையும் சோதனை செய்தனர். அதில் காப்பர் வயர் 2 டன் இருந்தது  சோதனையில் தெரிய வந்தது. மேலும், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் குஞ்சலம் கிராம  பகுதியில் மின்சார துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளுக்காக வைத்திருந்த காப்பர் உயர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், ஆந்திர மாநிலத்திற்கு விற்பனை செய்வதற்காக மினி லாரியில் காப்பர் ஒயரை கடத்திச்சென்றதும் உறுதியானது.  இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள், திருத்தணியை சேர்ந்த இரும்பு கடை வியாபாரிகள்  பெரியசாமி (35), ரத்தினசாமி (40)  ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, மினி லாரி மற்றும் காப்பர் வயரையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய, முக்கிய குற்றவாளிகளையும், மீதம் உள்ள காப்பர் வயரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவரையும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புகார் கொடுத்த 12 மணி நேரத்திற்குள் திருட்டுபோன காப்பர் வயரையும்,  குற்றவாளிகளையும் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது. விரைந்து செயல்பட்ட போலீசாரை மாவட்ட எஸ்.பி வெகுவாக  பாராட்டினார்.


Tags : Uthukottai , Near Uthukottai Rs. 40 lakhs worth of electrical copper wire theft case; Two arrested to net major criminals
× RELATED ஊத்துக்கோட்டையில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு