×

விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை சிபிசிஐ விசாரணை நடப்பதால்; கீழச்சேரி பள்ளிக்கு விடுமுறை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடப்பதால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்த மாணவி சரளா, கடந்த 25ம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் மறுநாள் (26ம்தேதி) பிரேதப பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் மரணம் குறித்து மப்பேடு போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார், பள்ளி நிர்வாகி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சக மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

மாணவி சரளாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக கடந்த 25ம் தேதி முதல் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. சிபிசிஐடி போலீசாரின் விசாரணை முடிவடையாததால் இன்றும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் பயிலும் உள்ளூர் மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் முக்கிய பிரமுகர்களிடமும் மாணவியின் மரணம் தொடர்பான கருத்துக்களை கேட்டறிய உள்ளதாகவும் வரும் புதன்கிழமை முதல் 6,7,8,9 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே சிபிசிஐடி போலீசாரின் முழு விசாரணைக்கு பிறகே பள்ளி திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் அதற்கான அறிவிப்பை வெளியிடும் என்று தெரிகிறது.


Tags : Inn ,CPCI , Plus 2 student's suicide in the hostel is being investigated by CBCI; Holiday for Geezachery School
× RELATED 90 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த ஆடு: தீயணைப்பு துறையினர் மீட்டனர்