×

ரயில் மோதி நாதஸ்வர கலைஞர் 2 பேர் பலி

சென்னை: கூடுவாஞ்சேரி அருகே மின்சார ரயில் மோதி நாதஸ்வர கலைஞர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த போளூரை சேர்ந்தவர்கள் கணேசன் (58) மற்றும் ஆறுமுகம் (56). இவர்கள்,  இருவரும் நாதஸ்வரம் வாசிப்பவர்கள். இந்நிலையில், கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பகுதியில் உள்ள நீஞ்சிலியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது. இந்த கோயிலின் திருவிழாவிற்கு நாதஸ்வரம் வாசித்து வந்த இருவரும் அன்று மாலை திருவிழா முடிந்ததும் மதுபானம் அருந்தியுள்ளனர். பின்னர், மீண்டும் மதுபானம் அருந்துவதற்காக தைலாவரம் ரயில்வே தண்டவாளம் ஓரத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு நேற்று இரவு 10 மணி அளவில் இருவரும் சென்று, மதுபானம் வாங்கி வந்துள்ளனர்.

அப்போது, தைலாவரத்தில் உள்ள  ரயில்வே தண்டவாளத்தை இருவரும் கடக்கும்போது, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதிவிட்டு சென்றது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் கணேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். ஆறுமுகம் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்காக போராடினார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து ஆறுமுகத்தை மீட்டு பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.  

அங்கிருந்த மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும்  அன்று இரவு ஒரு மணி அளவில் வந்த தாம்பரம் ரயில்வே போலீசார் கணேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Nathswara , Nathswara artist 2 killed in train collision
× RELATED நாதஸ்வர வித்வான் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன், ஒரு கிலோ வெள்ளி கொள்ளை