வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு: கம்யூனிஸ்ட்கள் மட்டும் எதிர்ப்பு

சென்னை: வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் முயற்சிக்கு அனைத்துக்கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.

இதில் பங்கேற்றது குறித்து அனைத்துக்கட்சி நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்.எஸ்.பாரதி (திமுக): வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளன. இதை பல ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து வருகிறோம். வாக்காளர் பட்டியலில் உள்ள பிரச்னைகளை சரி செய்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை காப்பாற்றப்படும், தேர்தலும் சுமுகமாக நடைபெறும். ஆதார் அட்டையை இணைப்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. நாடாளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஏறத்தாழ 5 கோடி ஆதார் அட்டை போலியாக உள்ளது என்று கூறியுள்ளார். ஆதார் அட்டை இணைக்கும்போது என்னென்ன நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்ற ஆலோசனையை தேர்தல் ஆணையத்துக்கு வழங்கியுள்ளோம். ஆதார் எண் இணைக்கும்பட்சத்தில் வாக்காளர் பட்டியல் பிழையில்லாமல் இருக்க வேண்டும்.

ஜெயக்குமார் (எடப்பாடி அணி): வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இரு வாக்குப்பதிவு போன்றவற்றை தவிர்ப்பதற்கு ஆதார் அட்டையுடன் இணைப்பதன் மூலமே அல்லது 11 வகையான ஆவணங்களை இணைப்பதன் மூலம்தான்  குளறுபடிகள் தவிர்க்கப்படும். முழுமையான போலி வாக்காளர்கள் இருக்கக்கூடாது. இதற்கு ஏற்றவகையில் தேர்தல் ஆணையம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 100 சதவீத அளவுக்கு தவறு இல்லாமல் வாக்காளர் பட்டியலை அளிக்க வேண்டும்.

கோவை செல்வராஜ் (ஓபிஎஸ் அணி): தேர்தல் ஆணையம் சார்பில் 6பி என்ற விண்ணப்பம் அளித்து, ஆதார் எண் சேர்க்கும் பணியை தொடங்கியுள்ளது. தற்போதுள்ள 6.5 கோடி பேரும் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இல்லையென்றால் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து எடுத்து விடுவார்கள். தாமோதரன் (காங்கிரஸ்): இந்த திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. முதலில் பாஜ எதிர்த்தார்கள். இப்போது, நல்ல திட்டம் என்று அவர்களே ஆதரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரு.நாகராஜன் (பாஜ): இளைஞர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு ஒரு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.

ஆறுமுக நயினார் (மார்க்சிய கம்யூனிஸ்ட்): 17 வயது நிரம்பி இருந்தாலே வாக்காளர் அட்டையில் சேர்க்க மனு அளிக்கலாம் என்று கூறியதை வரவேற்கிறோம். அதேநேரம், ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் இன்று பல்வேறு சலுகைகள் மறுக்கப்படுகின்றன. ஏழைகளுக்கு ஆதார் அட்டை இல்லை என்றால், அவர்களது வாக்காளர் உரிமை பறிக்கப்படும் அபாயம் ஏற்படும்.

பார்த்தசாரதி (தேமுதிக): ஆதார் எண் இணைப்பது என்று சொல்லி விட்டு, மீண்டும் 11 ஆவணங்கள் இருந்தால் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் சொல்லியுள்ளது. இது தவறான நடமுறை. ஆதார் எண் இணைத்தால் கள்ள ஓட்டை தடுக்க முடியும். பூத் சிலிப் கொடுப்பதில் தவறு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினர்.

Related Stories: