×

ராமேஸ்வரம் தீவில் தரமற்ற மீன் இறங்கு தளங்கள் அதிமுக ஆட்சியில் ரூ.100 கோடி வீணடிப்பு: மீனவர்கள் பயன்படுத்த முடியாத நிலை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மீன் இறங்கு தளங்கள் தரமின்றி உள்ளன. இதனால் ரூ.100 கோடி வீணடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் தீவுப்பகுதி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக மீன்வளத்துறையால் ரூ.100 கோடி செலவில் மீன் இறங்குதளங்கள் கட்டப்பட்டன. இதில் ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் இருந்து கடலுக்குள் ரூ.11 கோடி செலவில் மீன் இறங்கு தளம் கட்டப்பட்டது. இதன் பணிகள் நடந்தபோது, கடற்கரையில் இருந்து பாலம் துவங்கி கடலுக்குள் சென்று முடியும் இடம் அலைகள் பிரியும் இடத்தில் உள்ளது. இதனால் பாலம் வலுவாக நிற்காது என்று மீனவர்கள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அதிகாரிகள்திட்டமிட்டபடியே பாலத்தை கட்டி முடித்தனர். நாட்கள் செல்ல செல்ல பாலத்தின் தூண்கள் ஆட்டம் கண்டு விட்டன. படகுகளை இதில் நிறுத்துவது ஆபத்து என்பதால் மீனவர்கள் அதை தவிர்த்து விட்டனர்.

இதேபோல் தனுஷ்கோடி வடக்கு கடல் பகுதியில் ரூ.11 கோடியில் மீன் இறங்கு தளம் கட்டப்பட்டது. தற்போது நாட்டுப்படகுகள் மட்டும் நிறுத்தப்படுகிறது. பாம்பன் தெற்குவாடி கடற்கரை மீன் இறங்குதளம் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்டது. சில ஆண்டுகளிலேயே, பாலத்தின் கீழ் பகுதியில் கடல் நீரோட்டத்தில் இழுத்து வரப்படும் மணல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பாலத்தின் அடிப்பகுதி முழுவதும், சுற்றியும் மணல் மேவிவிட்டது. இதனால் பெரிய படகுகளை அணைத்து நிறுத்த முடியவில்லை. பாம்பன் குந்துகால் துறைமுகம் ரூ.70 கோடி செலவில் கட்டப்பட்டது. இதுவும் தற்போது படகுகள் நிறுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது.

இந்த துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்க தற்போது மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதற்கு ரூ.50 கோடிக்கு மேல் செலவாகும் என்று கூறப்படுகிறது. தூண்டில் வளைவு அமைக்கப்படாத பட்சத்தில் ரூ.70 கோடியில் அமைக்கப்பட்ட குந்துகால் துறைமுகமும் பயன்படாது என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் கட்டப்பட்ட அனைத்து மீன் இறங்கு தளங்களும் தரம் குறைந்ததாக, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் ரூ.100 கோடிக்கு மேல் மீன் வளத்துறை அதிகாரிகளால் விரயமாக்கப்பட்டுள்ளது. இந்த மெகா முறைகேடு குறித்து முழுமையான விசாரணை நடத்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rameswaram island ,AIADMK , Rameswaram island shoddy fish landing platforms Rs 100 crore wasted in AIADMK rule: Fishermen unable to use
× RELATED கடல் சீற்றத்தால் திசைமாறும்...