தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்து அணியுடனான 3வது டி20 போட்டியில் 90 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தென் ஆப்ரிக்கா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ரோஸ் பவுல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச, தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன் குவித்தது. ஹெண்ட்ரிக்ஸ் 70 ரன், ரைலி ரூசோ 31, மார்க்ரம் 51*, கேப்டன் மில்லர் 22 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 16.4 ஓவரில் 101 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. பேர்ஸ்டோ 27, ராய் 17, பட்லர், ஜார்டன் தலா 14 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ஷம்சி 5 விக்கெட் (4-0-24-5) வீழ்த்தினார். 90 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்கா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஷம்சி ஆட்ட நாயகன் விருதும், ஹெண்ட்ரிக்ஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Related Stories: