கொழும்பு: ‘கோத்தபய வருகை அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், அவர் நாடு திரும்ப இது சரியான நேரம் அல்ல’ என்று இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதிபராக இருந்த கோத்தபய ஜூலை 13ம் தேதி நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார். சிங்கப்பூர் அரசின் விசா விரைவில் முடிய உள்ளதால் கோத்தபய விரைவில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, ‘‘கோத்தபய விரைவில் நாடு திரும்புவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. கோத்தபய நாடு திரும்ப இது சரியான நேரம் அல்ல. கோத்தபய நாடு திரும்பினால் அது, பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இலங்கையில் எரிந்து கொண்டு இருக்கும் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும்,’’ என்றார். அதே நேரம், அரசு அலுவல் தொடர்பாக கோத்தபய உடன் ரணில் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
* இலங்கையில் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குணவர்த்தனேவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை மக்களுக்கு தொடர்ந்து இந்தியா ஆதரவு அளிக்கும் என உறுதியளிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
* மஹிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்வதற்கான பயணத்தடை இன்று வரை நீட்டித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* தமிழ் கட்சிகள் ஆதரவு
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, இலங்கையில் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்த அரசை ஏற்படுத்த அதிபர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் நேற்று ஆதரவு தெரிவித்தார்.