×

தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் மோதல்: முதல் இருக்கையை ஓபிஎஸ் அணி பிடித்ததால் பரபரப்பு

சென்னை: தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் தொடங்கியது. இந்த கூட்டத்தில், அதிமுக இரு அணியாக கலந்து கொண்டது. அதில் முதல் இருக்கையை ஓபிஎஸ் அணி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் நம்பரை இணைக்கும் பணிகள் ஆகஸ்ட் 1ம் தேதி (நேற்று) முதல் தொடங்கப்படுவதாக அறிவித்தது. இந்த பணியை அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரட்டை பெயர் பதிவு, ஒரே வாக்காளர் பெயர் பல இடங்களில் பதிவாகி இருப்பது என பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்கவே இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.

வீட்டுக்கு வரும் வாக்குப்பதிவு அலுவலரிடம் ஆதார் நம்பர் அல்லது 6பி விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு ஆதாரத்தை அளிக்க வேண்டும். ஏனென்றால், ஆதார் நம்பரை அளிக்க யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, ஆதார் நம்பரை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணிகள் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் மாநில அளவில் தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் (கலெக்டர்கள்) ஆலோசனை நடத்த வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, ஆதார் எண் இணைக்கும் பணி தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.

அதன்படி சென்னை, தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி (நேற்று) அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதன்படி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பியது. அதிமுக சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி அணியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, எங்கள் அணியினரும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை, மாநில தலைமை தேர்தல் அதிகாரியும் ஏற்று கொண்டு, இன்றைய அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஓபிஎஸ் அணியினர் பங்கேற்க கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று காலை 11.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தலைமையில் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன் (திமுக), தாமோதரன், நவாஸ் (காங்கிரஸ்), கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் (பாஜ), ராஜசேகர், ஆறுமுகநயினார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஏழுமலை, பெரியசாமி (இந்திய கம்யூனிஸ்ட்), பார்த்தசாரதி, ஜனார்த்தனன் (தேமுதிக) உள்ளிட்ட 9 கட்சி பிரதிநிகள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இரு அணியாக செயல்பட்டு வரும் நிலையில், இரு அணிகளுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக சார்பில் பங்கேற்க 3 பிரதிநிதிகள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக 10.30 மணிக்கே அதிமுக ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் கூட்டம் நடைபெறும் 2வது மாடிக்கு வந்தார்.

அவர் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட முதல் இருக்கையில் அமரந்து கொண்டார். அடுத்து எடப்பாடி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ ஆகியோர் 11 மணிக்கு வந்தனர். அவர்கள் கோவை செல்வராஜ்க்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தனர். தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில், ஓபிஎஸ் அணியினர் முதல் இருக்கையை பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகத்தினர் அவர்களை தொடர்ந்து புகைப்படம் எடுத்தனர். வழக்கமாக ஜெயக்குமார் சிரித்த முகத்துடன் போஸ் கொடுப்பார். ஆனால் 2வது இருக்கையில் அமர வைத்ததால் அவர் சற்று இறுக்கமான முகத்துடன் காணப்பட்டார்.

அப்போது, முதல் இருக்கையில் இருந்த கோவை செல்வராஜ் முன்னால் அதிமுக பெயர் பலகை இருப்பதை கண்டு ெஜயக்குமாரும், பொள்ளாச்சி ெஜயராமனும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, ஜெயக்குமார் உடனடியாக அந்த பெயர் பலகையை தனது இருக்கைக்கு நேராக இழுத்து வைத்து, ஓபிஎஸ் அணியினருடனான மோதல் போக்கை வெளிப்படுத்தினார். கூட்டத்தில் பேசிய அனைத்துக்கட்சி நிர்வாகிகளும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில் 100 சதவீதம் தவறு இல்லாமல் வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து தேர்தல் ஆணைய உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்த பணிகள் முடிவடையும்’ என்றார்.

Tags : EPS ,OPS ,Election Commission , EPS, OPS teams clash in Election Commission all-party meeting: OPS team won the first seat, causing excitement
× RELATED வேட்பாளர் படிவங்களில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்...