கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்கள் கட்டணத்தை அரசே ஏற்கும்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

சென்னை: கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் பெறுவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் பெற்றோரை இழந்தனர். ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்கிட ஏதுவாக மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் சிறப்பு பணிகள் பிரிவு (டாஸ்க் போர்ஸ்) தமிழக அரசால் அமைக்கப்பட்டது. தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்படும். அந்த குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும்போது அந்த தொகை அந்த குழந்தைகளுக்கு வட்டியோடு வழங்கப்படும்.

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும். இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும். அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக, மாதந்தோறும் தலா ரூ.3 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும். இந்த உதவி தொகை அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 29ம் தேதி அறிவித்தார்.

அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும், நோய் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் தனியார் பள்ளிகளிலும் பயிலும் கொரோனாவால் தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று கொண்டு இருப்பின் அவர்களுக்கு கல்வி கட்டணம் பெறுவதில் இருந்து விலக்களித்து, தொடர்ந்து அவர்கள் அதே பள்ளியில் கல்வி பயில்வதை உறுதி செய்தல் வேண்டும். தனியார் பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் இருந்து கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு கருத்துருவினை உடனடியாக தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழுவிற்கு அனுப்பிட வேண்டும். அனைத்து பள்ளிகளும் கருத்துரு அனுப்பியதை உறுதிப்படுத்திட வேண்டும். அதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: