×

அரசு சார்பில் நடைபெறும் திருவிழாக்களில் பாகுபாடு கூடாது: ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் உத்தரவு

சென்னை: அரசு சார்பில் நடைபெறும் திருவிழாக்களில் எவ்விதப் பாகுபாடும் காட்டக்கூடாது என்று ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் வெளியிட்ட அறிக்கை ஆம்பூரில் புவிசார் குறியீடு பெறும் நோக்கில் மே 13,14,15 ஆகிய மூன்று நாட்களில், ‘ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022’ நடைபெறும் என்று திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹா அறிவித்திருந்தார். பிரியாணி திருவிழாவில் ‘பீப் பிரியாணி’ தவிர அனைத்து வகையான பிரியாணி வகைகளும் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பிலும் ஏன் பீப் பிரியாணி தவிர்க்கப்படுகிறது என்பதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை. இது குறித்து புகார் எழுந்தது. அதை பரிசீலித்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம்,‘திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை மட்டும் புறக்கணித்து இருப்பது, பாகுபாடாகும். இதற்கு ஏன் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என்று விளக்கம் கேட்டு, ஓர் அறிவிக்கையை கடந்த மே 12ம் தேதி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியது.

ஆணையத்தின் அறிவிக்கைக்கு ஜூன் 7ம் தேதி பதில் அறிக்கை அனுப்பிய திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர், பிரியாணி திருவிழாவில் மாவட்ட நிர்வாகம் சாதி ரீதியாக மக்களிடம் பாகுபாடு காட்டவில்லை என்ற ஆட்சியரின் பதிலை ஆணையம் ஏற்கிறது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டரின் பதிலை ஆணையம் ஏற்றுக் கொண்டாலும், அரசு ஏற்பாடு செய்யக்கூடிய பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்பட கூடாது என்பதையும், அப்படித் தவிர்த்தால் அது பாகுபாட்டுக்கு வழி வகுக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி, இனிவரும் காலங்களில் நடைபெறும் திருவிழாக்களில் மாவட்ட நிர்வாகம் பாகுபாட்டுக்கு வழிவகுக்கக் கூடாது என்ற உத்தரவை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பிறப்பிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Adi Dravida ,Tribal Commission , No discrimination in government-run festivals: Adi Dravida, Tribal Commission orders
× RELATED கொள்ளிடம் அருகே பழையாறு...