திருமங்கலம்: நேற்று இரவு பெய்த பலத்த மழையால் சிவரக்கோட்டை பகுதியில் கமண்டலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் எழுமலையில் உற்பத்தியாகி வரும் தெற்காறு சின்னக்கட்டளை, சௌடார்பட்டி, மீனாட்சிபுரம், கிழவனேரி வழியாக செங்கப்படை அடுத்த நேசனேரியில் கவுண்டாநதியுடன் இணைகிறது. இங்குள்ள சிவரக்கோட்டை பகுதியில் இரண்டு ஆறுகளும் கமண்டல ஆறாக மாறுகிறது. திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளில் விவசாயத்திற்கு பலன் தரும் கமண்டலாறு காரியாபட்டியில் குண்டாற்றில் சேர்கிறது.
திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் கமண்டலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீண்ட நாள்களுக்கு பின்பு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை கண்ட சிவரக்கோட்டை கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆடிப்பட்டம் விதைக்க உள்ளநிலையில் சிவரக்கோட்டை ஆற்றில் வெள்ளம் ெபருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கமண்டலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து கரைகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து துண்டிப்பு: திருமங்கலம் பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் கவுண்டமாநதியில் தண்ணீர் பெருக்கெடுத்து தரைப்பாலத்தை மூழ்கடித்தது. இதனால் நேசனேரி கிராமம் பிறபகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 7 மணிக்கு துவங்கிய மழை 10 மணிவரையில் தொடர்ந்து பெய்தது. இதனால் நகரில் மின்தடை ஏற்பட்டது. பலத்த மழையால் கவுண்டாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படவே மழைநீர் நேசனேரி கிராமத்தை சூழ்ந்துள்ளது. இதனால் செங்கப்படையிலிருந்து நேசனேரி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியது. இதேபோல் மதுரை-விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து நேசனேரி விலக்கு வழியாக செல்லும் தரைப்பாலமும் தண்ணீரில் மூழ்கியதால் அந்த வழியாகவும் நேசனேரி கிராமத்திற்கு செல்ல இயலவில்லை. இதனால் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து நேசனேரி கிராமம் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் கிராமமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
செங்கப்படை, திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளுக்கு செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் கிராமத்தை விட்டுவெளியே செல்ல இயலவில்லை. கூலித்தொழில் மற்றும் விவசாய பணிக்கு செல்லும் கிராமமக்களும் வெளியேற வழியின்றி தவித்து வருகின்றனர்.