×

ஆவடி பகுதிகளில் ஆபத்தை விளைவிக்கும் மின்கம்பங்கள்

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, மகளிர் காவல்நிலைய நுழைவு வாயில், ஆவடி, பருத்திப்பட்டு பூங்கா உள்பட பல்வேறு பகுதிகளில் சாலையோர மின்கம்பங்களின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, துருப்பிடித்த கம்பிகள் வெளியே நீட்டி கொண்டிருக்கின்றன. மேலும், சில மின்கம்பங்களின் நடுப்பகுதி உடைந்து, எந்நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் சாய்ந்தபடி மக்களை பயமுறுத்தி வருகின்றன.

இன்னும் சில மின்கம்பங்களில் மரக்கிளைகள் உரசியபடி செல்கின்றன. இதனால் கிளைகள், மின்கம்பிகள் மீது உரசும்போது தீப்பற்றி எரிகிறது. சில நேரங்களில் அறுந்தும் விழுகின்றன. பல இடங்களில் குறைந்த அழுத்த மின்கம்பிகளும் ஒட்டு போட்ட நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதிகளில் திடீர் திடீரென மின்தடை ஏற்படுகிறது. மேற்கண்ட மின்கம்பங்கள், மின்கம்பிகள் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக முறையான பராமரிப்பின்றி சேதமான நிலையில் உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே, விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மின்வாரிய உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Avadi , Electric poles causing danger in Avadi areas
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!