×

பில்லூர் அணை நிரம்பியது 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

* கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் : பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடி நீர்மட்டத்தில் 97 அடியை எட்டியதால் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடி உபரி நீர் நேற்று முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 கோவை அடுத்த மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை உள்ளது.  கடந்த சில நாட்களாக பில்லூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் காரணத்தினால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடி நீர்மட்டத்தில் 97 அடியை நேற்று எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நேற்று முதல் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை மற்றும் சிறுமுகை பகுதி பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது பருவ மழைக்காலம் என்பதால் ஆற்றில் திடீரென்று வெள்ளம் பெருக்கெடுக்க அதிக வாய்ப்புள்ளதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவும், துணி துவைக்கவும் செல்ல வேண்டாமென்றும், கரையோரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறும் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சர்மிளா வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று தென்மேற்கு பருவமழை அதிகமாகப் பெய்து உள்ள காரணத்தினால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து பவானி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. நேற்று 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.  அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாகப் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோரப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சர்மிளா தலைமையிலான அதிகாரிகள்  ஒலிபெருக்கி மூலம் நேற்று எச்சரிக்கை விடுத்தனர்….

The post பில்லூர் அணை நிரம்பியது 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Billur dam ,Dinakaran ,
× RELATED கோவை பில்லூர் அணையில் இருந்து 3,000 கன அடி...