×

மாவட்ட அரசு நிர்வாகம் சார்பில் நடைபெறும் திருவிழாக்களில் எவ்விதப் பாகுபாடும் காட்டக் கூடாது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவு

சென்னை: மாவட்ட அரசு நிர்வாகம் சார்பில் நடைபெறும் திருவிழாக்களில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது என அதிகாரிகளுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் முதன் முறையாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புவிசார் குறியீடு பெறும் நோக்கில் மே 13,14,15 ஆகிய மூன்று நாட்களில், ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022 (20-க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் மற்றும் 30 - க்கும் மேற்பட்ட அரங்குகள்) நடைபெறும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர், துணை ஆட்சியர், வட்டாட்சியர், நகர மன்றத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உட்படப் பலர் பங்கேற்றனர்.

அப்பொழுது பேசிய மாவட்ட ஆட்சியர் திரு. அமர்குஷ்வாஹா, ஆம்பூரில் நடைபெறும் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி தவிர அனைத்து வகையான பிரியாணி வகைகளும் கிடைக்கும் என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பிலும் ஏன் பீப் பிரியாணி தவிர்க்கப்படுகிறது என்பதற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை. மேற்கண்ட செய்திக் குறிப்பையும் விளம்பரத்தையும் கண்ட ஆம்பூரில் உள்ள தலித் அமைப்புகள், இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் உணவுத் தீண்டாமை என்று எதிர்ப்புக் குரல் எழுப்பியதோடு மட்டுமின்றி, ஒருவேளை அப்படி நடந்தால் தாங்கள் மாவட்ட நிர்வாகம் நடத்தும் பிரியாணி திருவிழாவுக்கு எதிரிலேயே பீப் பிரியாணி கடைகளை நடத்துவோம் என்றும் அறிவித்தனர்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநிலத் துணைச் செயலாளர் திரு. சி.ஓம்பிரகாசம் (5/141, கசத்தோப்பு, பெரியாங்குப்பம்   கிராமம்,   ஆம்பூர் - 635814, திருப்பத்தூர் மாவட்டம்)   என்பவர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திற்கு 12.05.2022 அன்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: ஆம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். எங்களின் முக்கிய உணவாகிய மாட்டிறைச்சியை அரசு நடத்தும் விழாவில் அனுமதிக்க மாட்டோம் என்று எங்கள் மீது உணவுத் தீண்டாமையை அதிகாரிகள் நிகழ்த்துகின்றனர்.

மட்டன் மற்றும் சிக்கன் சாப்பிடாத - பீப் மட்டுமே சாப்பிடக்கூடிய - எங்களைப் போன்றவர்கள் அவ்விழாவில் பங்கேற்க முடியாத சூழலை - தீண்டாமையை ஒழிக்க வேண்டிய - அரசு அதிகாரிகளே  உருவாக்குகிறார்கள். இது எங்கள் மீது நிகழ்த்தப்பட்ட உளவியல் ரீதியான வன்முறையாகவே நாங்கள் உணர்கிறோம். மாண்புமிகு ஆணையம் என்னுடைய புகாரை ஏற்று மாட்டிறைச்சி பிரியாணியை விழாவில் அனுமதித்து நீதி வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இப்புகாரைப் பரிசீலித்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம், அரசின் மாவட்ட நிர்வாகம் நடத்துகின்ற 20 வகையான பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை மட்டும் புறக்கணித்து இருப்பது, அங்கு வசிக்கும் ஏறக்குறைய இரண்டு லட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான அதிகாரப்பூர்வமான பாகுபாடாகும்.

இதற்கு ஏன் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு, ஓர் அறிவிக்கையை 12.05.2022 அன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியது. மேற்கண்ட அறிவிக்கை மின்னஞ்சல் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டவுடன் மழையைக் காரணம் காட்டி பிரியாணி திருவிழாவை ஒத்தி வைப்பதாக ஆட்சியர் அறிவித்தார். அதுமட்டுமல்ல, அடுத்த நாள் வெளிவந்த ஆங்கில தி இந்து (13.05.2022) நாளேடுக்கு அளித்த பேட்டியில், பிரியாணி திருவிழாவை ஒத்தி வைத்து விட்டதால் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் உத்தரவு செல்லத்தக்கது அல்ல என்றும் தெரிவித்திருந்தார். மாவட்ட ஆட்சியரின் இத்தகைய பேட்டி ஆணையத்தை அவமதிப்பதாக அமைந்துள்ளது; இதற்கென அவர் மீது தனி நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றாலும் ஒரு மாவட்டத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பை அவர் வகிப்பதால் மக்கள் மத்தியில் அவருடைய மதிப்பு குறைந்து விடக்கூடாது என்ற அடிப்படையில் ஆணையம் அத்தகைய நடவடிக்கை எதையும் மேற்கொள்வதைத் தவிர்த்து விட்டது.

மேலும், ஆணையத்தின் அறிவிக்கைக்கு 07.06.2022 அன்று பதில் அறிக்கை அனுப்பிய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், ஆணையம் தனது அறிவிக்கையில் குறிப்பிட்டிராத பன்றி இறைச்சியைப் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.  பிரியாணி செய்வதற்காக பன்றி இறைச்சி எங்குமே பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும். ஆம்பூரில் உள்ள முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக இத்தகையதொரு வாதத்தை ஆட்சியர் முன் வைத்திருந்தார். எனினும் அவர் எதிர்பார்த்த எந்த விளைவையும் அது ஏற்படுத்தவில்லை. எது எப்படி இருப்பினும் சர்ச்சைக்குரிய பிரியாணி திருவிழாவில் மாவட்ட நிர்வாகம் சாதி ரீதியாக மக்களிடம் பாகுபாடு காட்டவில்லை என்ற ஆட்சியரின் பதிலை ஆணையம் ஏற்கிறது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் பதிலை ஆணையம் ஏற்றுக் கொண்டாலும், அரசு ஏற்பாடு செய்யக்கூடிய பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது என்பதையும், அப்படித் தவிர்த்தால்  அது பாகுபாட்டுக்கு வழி வகுக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி, இனிவரும் காலங்களில் நடைபெறும் திருவிழாக்களில் மாவட்ட நிர்வாகம் பாகுபாட்டுக்கு வழிவகுக்கக் கூடாது என்ற உத்தரவை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பிறப்பிக்கிறது. ஆணையத்தின் இவ்வுத்தரவு, தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் மற்றும் அனைத்து மாவட்டங்களில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்படுகிறது இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : District Government Administration ,Tamil Nadu Addharavidar ,Aboriginal State Commission , No discrimination in festivals organized by district administration: Tamil Nadu Adi Dravidian and Tribal State Commission orders
× RELATED சரியான முகவரி குறிப்பிடப்படவில்லை...