×

அதிவேக இணைய சேவை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ரூ.1,50,173 கோடிக்கு ஏலம்: ஜியோ அதிகளவில் ஏலம் எடுத்ததாக தகவல்..!!

டெல்லி: அதிவேக இணைய சேவை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பட்ஜெட் தாக்கலின் போது 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை மூலம் நான்கரை லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த ஏலத்தின் மொத்த காலம் 20 ஆண்டுகளாகும். பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த 26ம் தேதி தொடங்கியது.

இந்த ஏலத்தில் உலக முன்னணி பணக்காரரான கௌதம் அதானியின் அதானி டேட்டா நெட்ஒர்க்ஸ், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 6ம் நாளாக நேற்று நடைபெற்ற ஏலத்தில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ரூ.1.50 லட்சம் கோடிக்கு மேல் அலைக்கற்றைகளை ஏலம் கோரின. ஏலத்தில் அனைத்து அலைவரிசைகளுக்கும் நல்ல போட்டி நடைபெற்றது. இதுவரை 37 சுற்றுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் 38வது சுற்று ஏலம் இன்று நடைபெற்றது.

இதில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த லக்னோ, அலகாபாத், வாரணாசி, கோரக்பூர், கான்பூர் ஆகிய பகுதிகளுக்கான 5ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு வந்துள்ளது. இதில், ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 7 சுற்றுகளாக நடந்த ஏலம் முடிந்த நிலையில், ஜியோ அதிகளவில் 5ஜி அலைக்கற்றையை எடுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏர்டெல், ஃவோடாபோன் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவு 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதானி குழுமம் குறைந்த அளவில் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.


Tags : Jio , Internet service, 5G spectrum, Rs.1,50,173 crore, auction
× RELATED இன்றைய ஆட்டங்கள்