புதுச்சேரி கவர்னர் பெயரில் அமைச்சருக்கு போலி மெசேஜ்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் என்ஆர் காங்., பாஜக கூட்டணி அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் லட்சுமிநாராயணன். இவரது செல்போன் நம்பருக்கு நேற்று வாட்ஸ் அப்பில் ஒரு புதிய நம்பரில் இருந்து குறுந்தகவல் (மெசேஜ்) வந்துள்ளது. அதை அமைச்சர் உடனே ஓப்பன் செய்து படித்துள்ளார். அப்போது ‘நான் உங்ககிட்டு பேசணும்... உடனடியாக எனது லைனில் வாங்க...’ என தகவல் இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து அந்த நம்பர் யாருடையது என்பதை கண்டறிய செல்போனில் உள்ள டிபியை அமைச்சர் லட்சுமி நாராயணன் பார்த்தபோது அதில் எந்த புகைப்படம் இடம்பெறாத நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் என்ற பெயர் இடம்பெற்றிருந்தது. இதைப் பார்த்த அமைச்சர் அதிர்ச்சியடைந்தார்.

அவர் ஏற்கனவே புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் நம்பரை பதிவு செய்து வைத்திருந்த நிலையில், புதிய நம்பராக இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டு உடனே கவர்னரின் தனிசெயலருக்கு தகவல் கொடுத்தார். கவர்னரின் பெயரை யாரோ மர்ம நபர் தவறாக பயன்படுத்தி வருவதாக அமைச்சர் முறையிடவே, உடனே இதுபற்றி புதுச்சேரி டிஜிபி மனோஜ் குமார் லால் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிந்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

அமைச்சர் லட்சுமிநாராயணனுக்கு, கவர்னர் பெயரில் வந்துள்ள செல்போன் நம்பரை எடுத்து அவை யாருடையது? என்பது தொடர்பாக விசாரித்ததில், அது உத்தர பிரதேச நம்பர் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: