வாடகைக்கு வசித்த குடும்பத்தினருக்கு வீட்டை இலவசமாக கொடுத்த மூதாட்டி: கேரளாவில் நெகிழ்ச்சி

திருவனந்தபுரம்: 14 வருடங்களுக்கும் மேலாக தனது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த குடும்பத்தினருக்கு வீடு மற்றும் 7 சென்ட் நிலத்தை மூதாட்டி தானமாக வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே மண்ணடி பகுதியை சேர்ந்தவர் சந்திரமதி அம்மா (77). திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த 14 வருடங்களுக்கு முன்பு தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட தீர்மானித்தார். அதன்படி எர்ணாகுளத்தை சேர்ந்த ஜோசப் என்பவருக்கு மாதம் ₹500க்கு வாடகைக்கு கொடுத்தார். தொடர்ந்து ஜோசப், மனைவி சரஸ்வதி, மகள் பொன்னுவுடன் அந்த வீட்டில் குடியேறினார். நாளடைவில் சந்திரமதியுடன் ஜோசப்பின் குடும்பம் மிகவும் நெருக்கமானது. நெருங்கிய உறவினர்களைப் போல ஒருவருக்கொருவர் உதவிகளை செய்து வந்தனர்.

ஜோசப் கூலித் தொழில் செய்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு வருமானம் குறைந்ததை தொடர்ந்து தனக்கு வாடகைப் பணம் தேவையில்லை என்று சந்திரமதி கூறினார். அதன் பிறகு வாடகை எதுவும் கொடுக்காமல் தான் ஜோசப்பின் குடும்பம் சந்திரமதியின் வீட்டில் வசித்து வந்தது. இந்த நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஜோசப் திடீரென மரணமடைந்தார். அதன் பிறகு சரஸ்வதிக்கும், மகள் பொன்னுவுக்கும் சந்திரமதி தான் எல்லா உதவிகளையும் செய்து வந்து உள்ளார்.

இதற்கிடையே சந்திரமதியின் சொத்துக்களுக்காக சில உறவினர்கள் அவரை வட்டமடிக்க தொடங்கினர். ஆனால் உறவினர்கள் யாருக்கும் சொத்தை கொடுக்க சந்திரமதிக்கு விருப்பமில்லை. யாருடைய ஆதரவும், அரவணைப்பும் இல்லாத ஜோசப்பின் மகள் பொன்னுவுக்கு தனது வீடு உள்பட 7 சென்ட் நிலத்தை தானமாக எழுதிக் கொடுக்க தீர்மானித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதற்கான பத்திரப் பதிவும் நடந்தது. சந்திரமதியின் இந்த செயல் அவரது உறவினர்கள் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் ஊர் மக்கள் அனைவரும் அவரது நல்ல உள்ளத்தை பாராட்டி வருகின்றனர். ஜோசப்பின் மகள் பொன்னு தற்போது பிளஸ் டூ படித்து வருகிறார். அவரை ஒரு கலெக்டர் ஆக்க வேண்டும் என்பதுதான் சந்திரமதியின் இப்போதைய விருப்பமாகும்.

Related Stories: