×

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: ஆழ்கடலில் செஸ் விளையாடி அசத்திய நண்பர்கள்

சென்னை: தமிழ்நாடு அரசின் சிறப்பான ஏற்பாட்டின், மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி வரும் 10-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், இந்தியா உள்ளிட்ட 187 நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர், வீராங்கனைகள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்று உள்ளனர். தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச அளவில் நடைபெறுவதால் இதனை வரவேற்க பல்வேறு தரப்பினர் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் புகழ்பெற்ற ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் செஸ் ஒலிம்பியாட் போட்டியை புதுவிதமாக வரவேற்றுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டெம்பிள் அட்வன்ச்சர் என்ற பெயரில் ஆழ்கடல் பயிற்சி வழங்கிவரும் அரவிந்த், சுதந்திரதினம், விளையாட்டு வெற்றிகள், உடல் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை கடலுக்கு அடியில் நிகழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில், சென்னை காரப்பாக்கம் பகுதியிலுள்ள நீலாங்கரை கடலில் சுமார் 60 அடி ஆழத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து ஆழ்கடலில் செஸ் விளையாடினார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், விளையாட்டு வீரர்களை வாழ்த்தும் வகையிலும் கடலுக்கு அடியில் செஸ் விளையாடியதாக ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் தெரிவித்தார். மேலும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் தம்பி போன்று உடையணிந்து கடலுக்குள் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்றது அனைவரையும் கவர்ந்தது.     


Tags : 44th Chess Olympiad , 44, Chess Olympiad, Deep Sea, Friends
× RELATED செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி,...