ஆடி திருவிழாவை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மனுக்கு 4 கிராம மக்கள் தாய் வீட்டு சீதனம்: 50,000 பேர் ஊர்வலமாக கோயிலில் ஒப்படைத்தனர்

பெரியபாளையம்: ஆடி திருவிழாவை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மனுக்கு 4 கிராமத்தை சேர்ந்த மக்கள் தாய் வீட்டு சீதனம்  கொடுத்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள புகழ்பெற்ற பவானி அம்மன் கோயிலில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா தொடர்ந்து 14 வாரங்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். வேப்பிலை ஆடை அணிந்தும் முடி காணிக்கை செலுத்தியும் சேவல் கொடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுகின்றனர்.

 

மேலும் வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து பெரியபாளையம் கோயில் வளாகம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்து அங்கேயே ஆடு, கோழி பலியிட்டு ஆலய வளாகத்தில் பொங்கலிட்டு சாப்பிடுகின்றனர். இந்த நிலையில், ஆடி மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு நேற்று 4 கிராமங்களின் சார்பில், பவானி அம்மனுக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு வந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன்படி, பெரியபாளையம், அம்பேத்கர் நகர், தண்டு மாநகர், ராளாபாடி, அரியபாக்கம் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் பவானி அம்மனின் பல்வேறு உருவங்களை வடிவமைத்து அவற்றை டிராக்டரில் வைத்து ஊர்வலமாக பக்தியுடன் அழைத்து சென்றனர்.

பெண்கள், தலையில் மண்பானைகளை சுமந்துவர மேள தாளங்கள் முழங்க கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகியவற்றுடன் அம்மன் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த ஊர்வலத்தின்போது தாய் வீட்டு சீதனமாக புடவை, மஞ்சள், வளையல், குங்குமம், பூ, பழங்களை பவானி அம்மனுக்கு பக்தியுடன் படைத்து முதல்மரியாதை செய்து வழிபட்டனர். இந்த ஊர்வலத்தில் பெண்கள் உள்பட 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.இதை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை 4 கிராமத்ைத சேர்ந்த முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: