×

பஹ்ரைனில் மாயமான சின்னசேலம் முதியவர் 29 ஆண்டுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பினார்

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கருந்தலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து (60). விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு சுந்தராம்பாள் என்ற மகள், மணிவேல் என்ற மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த 1993ம் ஆண்டு தோட்ட வேலைக்காக பச்சமுத்து பஹ்ரைன் சென்றிருந்தார். மேலும் இவர் அங்கு சென்ற 1997ம் ஆண்டுவரை மாதாமாதம் பணமும், கடிதமும் வீட்டிற்கு அனுப்பி வந்தார். அதன்பிறகு எந்த தகவலும் இல்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை கண்டுபிடிக்க பல்வேறு முயற்சிகள் செய்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா, சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் தோட்ட வேலைக்காக கடந்த டிசம்பர் மாதம் பஹ்ரைன் சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு முதியவர் தங்கியிருந்த அறையில் தங்கதுரை தங்கி உள்ளார். முதியவரிடம் விசாரித்தபோது அவர் சின்னசேலம் அருகே உள்ள கருந்தலாக்குறிச்சி தனது சொந்தஊர் என்று தெரிவித்துள்ளார். வேலை இல்லாமல் முடங்கி விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் சிறுபாக்கத்தில் முத்துசாமி என்ற உறவினர் எனவும் தெரிவித்துள்ளார். 25 ஆண்டுகளாக வேலையில்லாமல் சிரமப்பட்டு வந்ததாகவும் தெரியவந்தது. இதையடுத்து பச்சமுத்து குறித்த தகவலை அவரது மகன் மணிவேலிடம் முத்துசாமி கூறி உள்ளார்.

இதையடுத்து மணிவேல், பஹ்ரைனில் பணிபுரியும் தனது நண்பர் நாகராஜிடம் தகவலை சொல்லி கடந்த ஜனவரி 28ந்தேதி நேரில் பார்க்க சொல்லி உள்ளார். அவரும் பார்த்து வீடியோ கால் மூலம் மணிவேல் பேசி உள்ளார். உடனடியாக உங்களை மீட்க முயற்சி செய்கிறேன் என்று மணிவேல் உறுதி கூறினார். இதையடுத்து பிப்ரவரி கடைசியில் இந்திய தூதரகத்தை மணிவேல் அணுகியதையடுத்து இந்திய தூதரகத்தில் இருந்து அவரது தகவல் சரிபார்ப்பிற்காக கள்ளக்குறிச்சி எஸ்பியாக இருந்த செல்வக்குமாருக்கு மெயில் அனுப்பி உள்ளனர். அவரும் பாஸ்போர்ட் அலுவலக அறிக்கையின்படி பச்சமுத்து என்பவர் சின்னசேலம் அருகே கருந்தலாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்தான் என்ற தகவலை உறுதிபடுத்தி தூதரகத்திற்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பஹ்ரைன் அன்னை தமிழ் மன்றத்தினர் செந்தில்குமார், தாமரைக்கண்ணன் மூலம் அவருக்கு தேவையான உதவிகளை செய்து விமானம் மூலம் கடந்த 29ம்தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் பச்சமுத்துவை அவரது மகன் மணிவேலிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து வீட்டுக்கு வந்த பச்சமுத்துவை பார்த்ததும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். 29 ஆண்டுகளுக்கு பிறகு பச்சமுத்து சொந்த ஊர் திரும்பியதால் ஊர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Chinnasalem ,Bahrain , Chinnasalem old man who disappeared in Bahrain returns home after 29 years
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...