வடசென்னையில் நன்னடத்தை விதி மீறிய 3 ரவுடிகளுக்கு சிறை

தண்டையார்பேட்டை: வடசென்னை பகுதிகளில் நன்னடத்தை விதிகளை மீறி, குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 ரவுடிகளை சிறையிலடைக்க வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் உத்தரவிட்டார். திருவொற்றியூர், பட்டினத்தார் கோயில் தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன் (21). பிரபல ரவுடி. இவர் மீது திருட்டு, வழிப்பறி உள்பட 12க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. புதுவண்ணாரப்பேட்டை, கருமாரியம்மன் நகரை சேர்ந்தவர் திலீப் (28). இவர் மீது கொலை உள்பட 5க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தண்டையார்பேட்டை, குமரன் நகர், 3வது தெருவை சேர்ந்தவர் காட்டுப் பூனை (எ) விக்னேஷ் (24). இவர் மீதும் கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 8க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த 3 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன், திருந்தி வாழ்வதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டியிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தனர். அதை மீறி 3 பேரும் வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் அந்தந்த காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, நன்னடத்தை விதிகளை மீறி குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிலம்பரசன், விக்னேஷ், திலீப் ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி முன்பு ஆஜர்படுத்தினர். சிலம்பரசனை 287 நாட்கள், திலீப்பை 213 நாட்கள், காட்டுப்பூனை (எ) விக்னேஷை 330 நாட்கள் சிறையில் அடைக்க துணை ஆணையர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 3 ரவுடிகளையும் நேற்று புழல் சிறையிலடைத்தனர்.

Related Stories: