மதுரை மகாலில் குறும்படம் போட்டோ ஷுட் நடத்த நிரந்தர தடை: தொல்லியல் துறை அதிரடி உத்தரவு

மதுரை: மதுரையின் அழகு அடையாளமான பெருமைக்குரிய திருமலை நாயக்கர் மகாலில் குறும்படங்கள், போட்டோ ஷுட் போன்றவை எடுக்க நிரந்தர தடை விதித்து மதுரை மண்டல தொல்லியல் துறை உதவி இயக்குனர் சிவானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

மதுரையின் அழகு அடையாளங்களில் ஒன்று திருமலை நாயக்கர் மகால். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த மகால், உலகப்புகழ் சுற்றுலாத் தலம் வரிசையிலும் முக்கிய இடத்தில் நிற்கிறது. மகாலில் நூற்றுக்கும் அதிக சினிமாக்கள், விளம்பரப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நூற்றாண்டுகள் கடந்த பழமைக்குரிய மகாலின் சுவர்கள், தூண்கள் இந்த ஷுட்டிங் உள்ளிட்ட காரணங்களாலும், சிலர் முறையாக பாதுகாப்புடன் செயல்படாததாலும் சேதம் அடைவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன்பேரில் நீதிமன்றம் கடந்த 2011ம் ஆண்டு முதல் திரைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதித்தது.

இதற்கிடையில் சமீபத்தில் குறும்படம் ஒன்று திருமலை நாயக்கர் மகால் உட்பகுதியில் எந்த ஒரு அனுமதியும் இன்றி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இங்கு எடுக்கப்பட்ட காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த படத்தில் துப்பாக்கிகள் பயன்படுத்துவது போன்றும், பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும் காட்சிகள் அமைந்திருந்தன. எந்த ஒரு அனுமதியும் இன்றி, மக்களை அச்சுறுத்தும் விதத்தில் துப்பாக்கி பபயன்படுத்தி பொதுவெளியில் எடுக்கப்பட்டிருந்தது தொடர்பாக புகார் எழுந்தது.

இதையடுத்து தொல்லியல் துறை மதுரை மண்டல உதவி இயக்குநர்(பொறுப்பு) சிவானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள சின்னங்களில் படப்பிடிப்பு நடத்த நிரந்தரமாக தடை விதிக்க அரசாணை உள்ளது. எனவே மதுரை மகாலில் குறும்படம், பெரும்படம் எடுக்கவும், போட்டோ, வீடியோ ஷுட் எடுக்கவும், பிளாஷ் லைட், அம்ப்ரல்லா லைட் பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் டிரோன் பயன்படுத்தவும், நகை, விளம்பரம், திருமணம், மாடல் என எந்த வித போட்டோ ஷுட் எடுக்கவும் தடை விதித்து ஆணையிடப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: