×

ஐகோர்ட் உத்தரவுப்படி ஸ்மார்ட் கடைகள் உருவாக்க முடிவு: மெரினாவில் 300 கடைகளுக்கு நோட்டீஸ்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள 300 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் கடைகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி முயற்சி மேற்கொண்டது. இதற்கு மெரினாவில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த திட்டம் கடந்த ஒரு வருடமாக தொடங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் ஒரு வருடத்துக்கு பிறகு இந்த ஸ்மார்ட் கடைகள் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முன் வந்துள்ளது. இதை செயல் படுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டு உள்ள 300 கடைகளை காலி செய்யுமாறு அதன் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘கடந்த 2020-ம் ஆண்டில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மெரினா கடற்கரையில் விற்பனையாளர்களுக்கு ரூ.16.5 கோடி மதிப்பிலான 900 ஸ்மார்ட் கடைகளை ஒதுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெரினாவில் கடை வைத்துள்ள வியாபாரிகள் போராட்டம் நடத்தினார்கள். இந்த முறை வியாபாரிகள் போராட்டம் நடத்தினால் கடைகளை மற்றவர்களுக்கு வழங்கி விடுவோம்’’ என்றனர்.

இது குறித்து மெரினாவில் கடை வைத்துள்ளவர்கள் கூறியதாவது: மெரினா கடற்கரையில் 300 கடை உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் பல ஆண்டுகளாக கடைகளை நடத்தி வந்தனர். ஒரே இரவில் அவர்களை அகற்றினால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வார்கள்? மெரினாவில் அங்கீகரிக்கப்பட்ட 1459 கடைகள் உள்ளன. ஆனால் இப்போது 900 பேருக்கு மட்டுமே கடைகளை ஒதுக்குவதாக கூறப்படுகிறது. இதில் 60 சதவீதம் மட்டுமே ஏற்கனவே உள்ள வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளது. மீதி கடைகள் புதியவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்து நாங்கள் போராடுவோம் என்றனர்.

Tags : ICourt ,Marina , ICourt orders smart shops: Notice to 300 shops in Marina
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு