×

இதமான சூழல் நிலவியதால் ஊட்டி படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி:  ஊட்டியில் நேற்று வெயிலுடன் இதமான காலநிலை நிலவியதால், ஊட்டி  படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களைகட்டி காணப்பட்டது.  ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள ஊட்டி ஏரியில் படகு இல்லம் அமைந்துள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் படகு இல்லம் மூலம் ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. கடந்த ஒரு வார காலமாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், வார விடுமுறை நாளான நேற்று ஊட்டியில் வெயிலுடன் இதமான காலநிலை நிலவியது. இதனால் வழக்கத்திற்கு மாறாக நீண்டநாளுக்கு பின்னர். சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் ஊட்டி படகு இல்லம் மூலம் ஊட்டி ஏரியில் சவாரி செய்தனர். குழுவாக வந்திருந்த பயணிகள் மேற்கூரையுடன் கூடிய மோட்டார் படகுகளில் குதூகலமாக சவாரி செய்தனர். மிதிபடகில் பயணிக்க ஆர்வத்துடன் காத்திருந்து, சவாரி செய்து மகிழ்ந்தனர். இதற்கிடையே மோட்டார் படகில் பயணிப்பதற்காக டிக்கெட் எடுத்து வரும் பயணிகளை அனுமதிக்கும் போது படகு இல்ல ஊழியர்கள் மரியாதை குறைவாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிக்கெட்டை வாங்கி சரி பார்க்க சைகை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்தபடியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இதுகுறித்து படகு இல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, ஊழியர்களுக்கு உரிய அறிவுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Ooty ,boat house , Because of the pleasant atmosphere Tourists flock to Ooty Boat House
× RELATED தாவரவியல் பூங்காவில் நடவு...