×

கோயில்கள், பீரங்கி, கோட்டைச்சுவர்கள் சேதம் பிரான்மலையில் அழியும் வரலாற்று பொக்கிஷங்கள் : சுற்றுலாத்தலமாக அறிவித்து பராமரிக்கப்படுமா?

சிங்கம்புணரி:  சிங்கம்புணரி அருகே கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரிமன்னன் ஆட்சி செய்ததாக கூறப்படும் பறம்பு மலை எனப்படும் பிரான்மலை உள்ளது. 2500 அடி உயரமுள்ள இம்மலை ஆன்மீக சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் மிக்கதாக உள்ளது. சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் இம்மலைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு மாசி சிவராத்திரியில் பாலமுருகனுக்கு பால்குட விழாவும், கார்த்திகை தீபத் திருவிழா மலை உச்சியில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆன்மிகச் சிறப்பாக இம்மலை அடிவாரத்தில் உள்ள மங்கைபாகர் தேனம்மை கோயில் ஆகாயம், மத்திபம், பாதாளம் என மூன்று நிலைகளில் சிவன் காட்சியளிக்கிறார். பாதாளத்தில் திருக்கொடுங்குன்றநாதர் குயிலமுத நாயகியம்மன் சன்னதியும், மத்திபத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், வடுக பைரவர் சன்னதியும் உள்ளது. எங்கும் இல்லாத சிறப்பாக ஆகாய தளத்தில் சிவபெருமான் மீது அம்பிகை சாய்ந்த நிலையில் திருமண கோலத்தில் மங்கைபாகர் தேனம்மை நவபாசன சிலையில் உருவமாக காட்சியளிக்கிறார்.

பாரி மன்னன் நினைவாக இக்கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் ஏழாம் நாள் பாரி விழாவில் முல்லைக்கு தேர் கொடுக்கும் நிகழ்வாக கோயில் முன்பு சப்பரத்தில் முல்லை கொடிபடரும் சம்பிரதாய திருவிழா நடைபெறும். மேலும் கோயிலின் உள்ளே முல்லைக்கு தேர் கொடுக்கும் பாரியின் சிற்பம் உள்ளது. இம்மலைப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வற்றாத சுனைகள் உள்ளன. மேலும் மலை உச்சியில் சிவன் கோயில் இருந்ததற்கான அடையாளமாக சிவலிங்க ஆவடை,  சிதிலமடைந்த வெற்றி விநாயகர் கோயில், பாலமுருகன் கோயில் மற்றும் சேக் அப்துல்லா அவுலியா தர்காவும் உள்ளது. மேலும் இம்மலையைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் அளவில் கருங்கல் கோட்டைச் சுவர், பந்திப்பாரை என்னும் இடத்தில், வீரர்கள் வரிசையாக அமர்ந்து சாப்பிடும் வகையில் தட்டு வடிவில் பாறைகளில் துளை அமைக்கப்பட்டு உள்ளது. இம்மலையில் எட்டு அடி நீள பீரங்கியும் உள்ளது. மேலும் மன்னர்கள் காலத்தில் வனவிலங்குகள் வேட்டையாடுவது, போர் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த பகுதியாக பிரான்மலை பகுதி உள்ளது.

ஆனால் தற்போது இம்மலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வெற்றி விநாயகர் கோயிலின் நான்கடி அகலம் உள்ள சுற்றுச்சுவரின் கற்கள் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு சிதலமடைந்து வருகிறது. மேலும் பாலமுருகன் கோயில் பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாததால் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இங்குள்ள பீரங்கி, சிவலிங்க ஆவடை சமூக விரோதிகளால் உருட்டி செல்லப்பட்டு புதருக்குள் உள்ளது. மேலும் கோட்டைச் சுவர்கள் பல இடங்களில் உடைந்தும் சிதிலமடைந்தும் காணப்படுகிறது. மேலும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு இணையாக 2500 அடி உயர பிரான்மலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம் புகழ் பெற்றது. இத்தீபதொட்டி சேதமடைந்து உள்ளது. பழமைவாய்ந்த கோயில்கள், கோட்டை சுவர்,  பீரங்கி ஆகியவற்றை மாவட்ட நிர்வாகமும் தொல்லியல் துறையினரும் பாதுகாத்து சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முயற்சி மேற்கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர்
கிராமமக்கள் கூறுகையில், ‘‘பல ஆண்டுகளாக பிரான்மலையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். முன்னாள் முதல்வர் கலைஞர் பிரான்மலையை சுற்றுலா தலமாக அறிவிக்க முயற்சிகள் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து 1989ல் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விதமாக பயணிகள் தங்கும் விடுதி கட்டப்பட்டது. ஆனால் அதுவும் பல ஆண்டுகளாக சிதலமடைந்து காணப்படுகிறது. வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு தங்குவதற்கும் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. மேலும் பாரம்பரிய புராதன சின்னங்களை சமூக விரோதிகள் சேதப்படுத்தி வருகின்றனர். மலை உச்சியில் தொடர்ந்து வரும் சமூக விரோத செயல்களால் கோயில்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. அரசு இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலக்குறிஞ்சியும் ஊமைத்துரையும்
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய நீலக்குறிஞ்சி பூக்கள்,  வெள்ளைக்குறிஞ்சி, அரிய வகை மூலிகைகள், காட்டு விலங்குகள் என இம்மலையில் ஏராளமான அதிசயிக்ககூடிய நிகழ்வுகள் உள்ளன. மேலும், ஆங்கிலேயரிடமிருந்து தப்பிய ஊமைத்துரை இம்மலை உச்சியில் (ஊமையன் குடகு) தங்கியதற்கான வரலாறு உள்ளது.


Tags : Branmalai , Damage to temples, cannons, fort walls are the historic treasures of Pranamalai : Will it be declared and maintained as a tourist attraction?
× RELATED சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் முல்லைக்குத் தேர் கொடுக்கும் பாரிவிழா