தேனி மாவட்டத்தில் தொடரும் கனமழை ஆறுகளில் ஆர்ப்பரிக்கும் காட்டாற்று வெள்ளம்

* எச்சரிக்கை பலகை அவசியம்

* நீர்நிலைகளில் குளிப்பதை தவிருங்கள்

உத்தமபாளையம்: தேனி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், குளம், கண்மாய், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து பாய்ந்தோடுகிறது. எனவே, நீர்நிலைகளில் குளிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்கிறது.முக்கிய அணைகளாக உள்ள முல்லை பெரியாறு, வைகை, சோத்துப்பாறை, மஞ்சளாறு அதிக நீர்வரத்தை பெற்று தண்ணீர் நிரம்பி வருகிறது. இவை தவிர சுருளியாறு, கொட்டக்குடியாறு, பெரியாறுகளில் வரக்கூடிய தண்ணீர் ஒரு சில நேரங்களில் காட்டாற்று வெள்ளமாக மாறி வருகிறது. கூடலூர் தொட்டு சுருளிப்பட்டி, கோகிலாபுரம், உத்தமபாளையம், சீலையம்பட்டி, வீரபாண்டி, என ஆற்றுப்படுகைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. தற்போது முல்லைபெரியாறு அணையில் இருந்து விவசாயத்திற்காக தினந்தோறும் விநாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் தண்ணீர் செல்லும் வேகம் அதிகரித்துள்ளது.இதனால் குளிப்பதை தவிர்ப்பது மிகவும் அவசியம். ஆனால் இதனை உணராமல் சிலர் ஆபத்தான குளியலை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். தண்ணீரின் வேகமான சுழலில் சிக்கிய பலர் கடந்த காலங்களில் இழுவைத் தண்ணீர் அடித்து சென்று உயிர்பலிகள் அதிகம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் மாவட்டத்தில் ஆற்றுநீரில் குளிக்க சென்று உயிரிழப்பு என்பது அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை தடுத்திட தேனி மாவட்ட நிர்வாகத்தில் உரிய திட்டங்கள் இல்லை. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் இக்காலத்தில் உரிய கவனம் எடுத்து ஆறுகளில் குளிக்க வருபவர்கள், துவைக்க வருபவர்கள் என அனைவரையும் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தடுப்பு வேலிகளும்அவசியம் முல்லையாற்றில் தண்ணீர் அதிகரித்து வரும் காலங்களில் எல்லாம் அடையாளம் தெரியாமல் அடித்து வரக்கூடிய மனித உயிர்கள் பிணங்களாக மிதப்பது அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் ஏதாவது ஒரு ஆழம் தெரியாத இடத்தில் குளிக்க சென்று மரணிப்பதும், இது 2 அல்லது 3 நாட்களில் தண்ணீரில் மிதப்பதும் அதிகரிக்கிறது. கனமழை காலங்களில் ஆறுகள் மட்டும் அல்லாமல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள், கண்மாய்கள், போன்றவற்றிலும் குளிக்க சென்று உயிர்களை மாய்ப்பவர்கள் அதிகம். எனவே, கவனத்தோடு கண்காணிப்பது அவசியம். முல்லையாற்றில் ஆபத்தான இடங்களில் ஒவ்வொரு வருடமும் சிக்கி உயிரிழப்பவர்கள் அப்பாவி இளைஞர்கள்தான். எனவே, உத்தமபாளையம் முல்லையாற்றில் ஆபத்தான இடங்களாக தேர்ந்தெடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை பலகைகளை வைப்பதுடன், ஆபத்தான இடங்களில் குளிப்பதை தடுக்க வேலிகளை அமைக்க முன்வரவேண்டும்.

பெற்றோர்களே...

பிள்ளைகளை கவனிங்க!

முல்லையாற்றில் தற்போது அதிகமானஅளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் ஆபத்தை உணராமல் குளிப்பதும், உற்சாகமாக துவைப்பதும் அதிகமான அளவில் நடக்கிறது. பள்ளங்கள் அதிகமானஅளவில் ஏற்பட்டுள்ளதால் எந்த இடம் மிகவும் ஆபத்தான இடம் என தெரியாமல் மாணவர்கள், சிறுவர்கள் துள்ளிக்குதித்து ஆற்றில் குளியல்போடுகின்றனர். இதனால் நீச்சல் தெரிந்தவர்களை கூட நொடிகளில் இழுத்து சென்றுவிடுகிறது.தண்ணீரில் மூழ்குபவர்கள் சில நிமிடங்களில் மூச்சுத்திணறி இறக்கும் நிலை உள்ளது. எனவே இனிவரக்கூடிய நாட்களிலாவது பாளையம், சின்னமனூர், வீரபாண்டி, மார்க்கயன்கோட்டை, கே.கே.பட்டி உள்ளிட்ட ஊர்களில் வசிப்பவர்கள்,தங்களது பிள்ளைகளை மிக கவனமாக பார்ப்பதுடன் ஆற்றில் சென்று குளிக்க வேண்டாம் என அறிவுரை வழங்க வேண்டும்.

Related Stories: