×

கிராமப்புற வழித்தடங்களில் பிஆர்டிசி பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைப்பு

* அரசின் மானியம் கோடி கணக்கில் வீணடிப்பு * கவர்னர், துறை அமைச்சர் கண்காணிப்பார்களா?

புதுச்சேரி:  புதுச்சேரி கிராமப்புற வழித்தடங்களில் பிஆர்டிசி பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பிஆர்டிசி நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் கோடிக்கணக்கில் அரசு வழங்கும் மானியம் வீணடிக்கப்பட்டு வருகிறது.  புதுச்சேரியில் 1986ம் ஆண்டு சுற்றுலா மேம்பாட்டு கழகமாக ஆரம்பிக்கப்பட்டு, 1988ல் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இது 2005ல் சாலை போக்குவரத்து கழகமாக (பிஆர்டிசி) மாற்றப்பட்டது. புதுவையில் இருந்து சென்னை, ஓசூர், நாகப்பட்டினம், திண்டிவனம், திருப்பதி, பெங்களூர், மாகே, கடலூர், விழுப்புரம், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயங்கப்படுகின்றன. கடந்த 2011ம் ஆண்டு வரை பிஆர்டிசி லாபத்தில் இயங்கி வந்தது. அதன்பிறகு புதிய பேருந்துகள், உதிரி பாகங்கள் வாங்குவதில் முறைகேடு, நிர்வாக சீர்கேடு போன்ற காரணங்களால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 கடந்த 10 ஆண்டுகளாக நஷ்டத்தில் தள்ளாடி வரும் பிஆர்டிசியை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அனைத்து வழித்தடங்களிலும் மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், பிஆர்டிசிக்கு சொந்தமான பெரும்பாலான பேருந்துகள் பணிமனை வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்டிஐ மூலம் தகவல் பெறப்பட்டது. அதில், பிஆர்டிசியில் புதுச்சேரி-100, காரைக்கால்-32, மாகே-4, ஏனாம்-4 என 140 பேருந்துகள் உள்ளன. இதில் புதுச்சேரியில் உள்ள 100 பேருந்துகளில் தொலைத்தூர பேருந்துகள்-6, கிராமப்புற வழித்தட பேருந்துகள்-26 உட்பட 50 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 315 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆண்டுக்கு ரூ.22.18 கோடி ஊதியமாக செலவிடப்படுகிறது. கடந்த 2014-15ம் ஆண்டு முதல் 2021-22ம் ஆண்டு வரை மொத்தம் ரூ.93.19 கோடி அரசிடமிருந்து மானியமாக பெற்றுள்ளது என தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

 புதுச்சேரி பிராந்தியத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிராமப்புற வழித்தட பேருந்துகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணி முடிந்து இரவு நேரத்தில் அவரவர் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருந்தவை. இந்த பேருந்துகள் அனைத்தும் இரவு அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு பின்பு மீண்டும் கிராமப்புற பகுதியிலிருந்து புதுச்சேரி பணிக்கு வர வசதியான முறையிலான நேர அட்டவணைப்படி இயக்கப்பட்டு வந்தன. கொரோனா தொற்று பரவலின் போது நிறுத்தப்பட்ட விரைவு பேருந்துகள் மீண்டும் இயங்கப்பட்டு வருகிறது. ஆனால், புதுவையில் இருந்து சோரியாங்குப்பம், ஆனந்தபுரம், கரையாம்புத்தூர், சுத்துக்கேணி, பத்துக்கண்ணு உள்ளிட்ட கிராமப்புற வழித்தடங்களில் இயங்கப்பட்ட பேருந்துகள் மட்டும் இயக்கப்படாமல் பிஆர்டிசி பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிஆர்டிசியின் இதுபோன்ற நிர்வாக சீர்கேடுகளால்தான் ஊழியர்களுக்கே ஊதியம் அளிக்க முடியாமல் அரசிடம் கோடிக்கணக்கில் மானியம் பெற்று அதன் மூலம் ஊதியம் போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 இதுகுறித்து ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி கூறுகையில், பிஆர்டிசிக்கு அதிக வருமானம் ஈட்டித் தரக்கூடிய கிராமப்புற வழித்தட பேருந்துகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது ஏதோ உள்நோக்கம் கொண்டதாகவும், தனியார் பேருந்துகளுக்கு ஆதரவாகவும் செயல்படுவது போன்றும் தோன்றுகிறது. மேலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளால் நிறுவனத்துக்கு வருமான இழப்பு ஏற்படுவதோடு, சாலை வரி, இன்சூரன்ஸ் மூலம் கூடுதல் நிதி இழப்பு ஏற்பட்டு அரசு நிதி கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டு வருகிறது.  ஒரே பேருந்தை கொண்டு செயல்படும் தனியார் பேருந்து நிறுவனங்கள் ஒருசில ஆண்டுகளிலேயே பல பேருந்துகளை கொண்டு செயல்படும் அளவுக்கு வளர்ச்சி அடையும் போது, பிஆர்டிசி நிறுவனம் பல ஆண்டுகளாக ஊழியர்களுக்கே ஊதியம் போட முடியாத அளவுக்கு நஷ்டத்தில் இயங்கி வருவது எப்படி? எனவே, பிஆர்டிசி நிறுவனத்துக்கு மோட்டார் தொழில்நுட்பம் அறிந்த அதிகாரிகளை மேலாண் இயக்குநராக நியமிக்க வேண்டுமெனவும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து கிராமப்புற வழித்தட பேருந்துகளையும் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கவர்னர், போக்குவரத்து துறை அமைச்சர், தலைமை செயலர்,  போக்குவரத்து துறை செயலர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளேன் என்றார்.

இதுகுறித்து பிஆர்டிசி நிர்வாகத்திடம் கேட்ட போது, கொரோனா பொது முடக்கத்தின் போது பணிமனையில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது நெல்லை தவிர்த்து அனைத்து பகுதிகளுக்கு மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கிராமப்புற வழித்தடங்களில் இயக்கப்பட்ட பல பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி இயக்க முடியாத நிலையில் உள்ளது. அவற்றை சரி செய்ய ஒரு பேருந்துக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும். சுமார் 30 பேருந்துகளை சீரமைக்க ரூ.3 கோடி வரை செலவாகும். இதனால் பேருந்துகளின் நிலையை அறிந்து ஒவ்வொன்றாக சரி செய்து இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். என்றார். பிஆர்டிசி நிறுவனத்துக்கு மோட்டார் தொழில்நுட்பம் அறிந்த அதிகாரிகளை மேலாண் இயக்குநராக நியமிக்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து கிராமப்புற வழித்தட பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : PRTC , Suspension of PRTC buses on rural routes
× RELATED தென்மாவட்டங்களுக்கு SETC ,TNSTC, PRTC, ஆம்னி...