×

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 10 நாட்களில் அமல்படுத்தவில்லை என்றால், தலைமை செயலாளர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும்: ஐகோர்ட் கெடு

சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூறிய நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீர்நிலை மற்றும் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படவில்லை என செய்தி வெளியாகி இருந்தது. இந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது நீர்நிலை ஆக்கிரமிப்பு, மற்றும் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை கண்டறிய வேண்டும்.

அவ்வாறு கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு இது தொடர்பான நடவடிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு இது இது தொடர்பாக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு உரிய நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர். மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூறிய நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும்.

நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தவில்லை என்றால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகும் படி உத்தரவிட நேரிடும். சம்மந்தப்பட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ஊதியம் பெற அனுமதிக்க முடியாது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 10 நாட்களில் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி அறிக்கை தாக்கல் செய்வதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Chief Secretary ,ICourt Kedu , If water encroachments not implemented in 10 days, Chief Secretary may be ordered to appear in person: ICourt Kedu
× RELATED ஜூன் 11-ல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை