×

வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்ற வழக்கில் நடிகர் தனுஷ் ஆஜராவதில் இருந்து விலக்கு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றது தொடர்பான வழக்கில் நடிகர் தனுஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும்போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறாததால், தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு  எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பு சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2014ல் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக பொது சுகாதார துணை இயக்குனர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற சைதாப்பேட்டை நீதிமன்றம் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்ய கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், ஆஜராதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார்,  சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து, விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கிலும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார். 


Tags : Dhanush , Unemployed graduate, smoke, actor Dhanush, Icourt
× RELATED தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்தவர் மரணம்