வீரப்பன் தேடுதல் வேட்டையில் சிறப்பு அதிரடி படை எஸ்பியாக இருந்த சஞ்சய் அரோரா டெல்லி போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்பு!!

சென்னை: தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வாகி சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் சிறப்பு அதிரடி படை எஸ்பியாக இருந்த சஞ்சய் அரோரா டெல்லி போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக கேடரில் 1988ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக சஞ்சய் அரோரா தேர்வானார். தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியற்றிய அவர், சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்கும் சிறப்பு அதிரடி படையின் எஸ்பியாக சிறப்பாக செயல்பட்டார். இதற்காக சஞ்சய் அரோராவுக்கு வீரதீரச் செயலுக்கான முதலமைச்சரின் வீர பதக்கம் வழங்கப்பட்டது.

இதுதவிர  2014ம் ஆண்டு சிறப்பான சேவைக்கான ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம், காவல்துறை சிறப்புப் பணிக்கான பதக்கம், ஐநாவின் அமைதியை நிலைநாட்டும் பணிக்காக பதக்கம் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் சரக டிஐஜியாகவும், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு துணை இயக்குனராகவும் இருந்தார். மேலும் கடந்த 2002 முதல் 2004ம் ஆண்டு வரை கோவை மாநகர போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றினார். பிறகு சென்னை மாநகர காவல்துறையில் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்துள்ளார்.

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அவர், ஒன்றிய அரசின் பணிக்கு சென்றார். எல்லைப் பாதுகாப்பு படையில் சிறப்பு ஆபரேஷன்ஸ் ஐ.ஜி-யாகவும், சத்தீஸ்கர் பிரிவு சி.ஆர்.பி. எஃப் ஐ.ஜி-யாகவும் மற்றும் சி.ஆர்.பி.எப் சிறப்பு ஆபரேஷன்ஸ் ஐ.ஜி-யாகவும் பணியாற்றினார். கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் சஞ்சய் அரோரா இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையின் தலைமை இயக்குநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சக இயக்குநர் பி.ஜி.கிருஷ்ணன், தலைநகர் டெல்லியின் போலீஸ் கமிஷனராக சஞ்சய் அரோராவை நியமனம் செய்து உத்தரவிட்டார். அதன்படி இன்று சஞ்சய் அரோரா டெல்லி போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றுக் கொண்டார். ஜெய் சிங் மார்க்கில் உள்ள டெல்லி காவல்துறை தலைமையகத்திற்கு வந்த அவருக்கு, காவல்துறையினரால் சம்பிரதாய மரியாதை வழங்கப்பட்டது.

Related Stories: