×

தோகைமலை அருகே பொம்மாநாயக்கன்பட்டியில் இறந்தவர் உடலை ஆற்றுவாரியில் தூக்கி செல்லும் அவல நிலை: மயானத்திற்கு செல்லும் வழியில் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை

தோகைமலை: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சி பொம்மாநாயக்கன்பட்டி கிழக்கு தெருவில் வசிக்கும் பொதுமக்களின் மயான காட்டிற்கு செல்லும் சாலையில் உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பொம்மாநாயக்கன்பட்டி கிழக்கு தெருவில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியினருக்கான மயானம், சுமார் 1 கிமீ தொலைவில் பொம்மாநாயக்கன்பட்டி மேற்கு பகுதியில் அமைந்து உள்ளது. பொம்மாநாயக்கன்பட்டி மேற்கு பகுதியில் இருந்து வரும் ஆற்றுவாரியானது பொம்மாநாயக்கன்பட்டி, சுக்காம்பட்டி, கள்ளை வழியாக புரசம்பட்டி ஆற்றுவாரிக்கு செல்கிறது. ஆனால் ஆற்றுவாரியை கடந்து செல்வதற்கு உயர்மட்ட (மேல்மட்ட) பாலம் வசதி இல்லை.இதனால் மழை காலங்களில் பொம்மாநாயக்கன்பட்டி மேற்கு பகுதியில் இருந்து வரும் காட்டாற்று தண்ணீர் இந்த ஆற்றுவாரியில் அதிகமாக செல்வதாக இப்பகுதியினர் கூறுகின்றனர். அப்போது இறந்தவரின் உடலை கொண்டு செல்வதற்கும், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கும், ஆடுமாடுகள் மேய்ச்சலுக்கு செல்வதற்கும் மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

 இதனை அடுத்து ஆற்றுவாரியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2000ம் ஆண்டிற்கு பிறகு போதிய மழை இல்லாமல் இந்த ஆற்றுவாரியில் வெள்ளநீர் வராமல் இருந்து வந்துள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள மயானத்திற்கு செல்லும் வழியில் உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் மறந்து விட்டனர்.கடந்த ஆண்டு அதிகமான மழைபெய்தது. அப்போது ஆற்றுவாரியில் அதிகமான காட்டாற்று தண்ணீர் வந்தது. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தோகைமலை வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் இந்த ஆற்றுவாரியில் காட்டாற்று தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

இதேபோல் இந்த ஆற்றுவாரியில் தடுப்பணைகளும் அமைந்து உள்ளதால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் நேற்று பொம்மாநாயக்கன்பட்டி கிழக்கு தெருவில் முருகன் என்பவர் உடல்நலக்குறைவால் இறந்தார். இவரின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர; மிகுந்த சிரமத்திற்கு இடையே இளைஞர்களின் உதவியுடன் இறந்தவரின் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.இதனால் பொம்மாநாயக்கன்பட்டி கிழக்கு தெரு பொதுமக்கள் மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றுவாரியில் உயர்மட்ட பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



Tags : Pommanayakanpatti ,Thokaimalai , The body of the deceased in Pommanayakanpatti near Thokaimalai was found in the river Lifted Plight: To the graveyard Request to construct a high level bridge on the way
× RELATED கடவூர், தோகைமலை பகுதிகளில்...