சென்னையை பிடித்துக்கொண்ட சுகமான சதுரங்க காய்ச்சல்!: டீ குடித்துக்கொண்டே செஸ் விளையாடலாம்; கடையை செஸ் போர்டு போல் மாற்றிய உரிமையாளர்..!!

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் விமர்சியாக நடைபெற்று வருகிறது. இதனை சிறப்பிக்கும் வகையில் சென்னையில் பல இடங்களில் சதுரங்க கட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் கருப்பு, வெள்ளை கட்டங்கள் வரையப்பட்டுள்ளன. குறிப்பாக செஸ் போர்ட் போல வரையப்பட்டிருக்கும் நேப்பியர் பாலம் உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. செஸ் போர்ட் போல சட்டை அணியவும், செஸ் போர்ட் போல் வரையப்பட்டிருக்கும் இடங்களில் செல்பி எடுக்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு டீக்கடை முழுவதும் செஸ் போர்ட் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கு டீ குடிக்க வருபவர்கள் செஸ் விளையாடிக்கொண்டே டீ குடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்ணை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கடைக்கு செஸ் விளையாடுவதற்கென்றே மக்கள் அதிகளவில் வந்து செல்கிறார்கள். சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் இங்கு வந்து செஸ் விளையாடுகிறார்கள். செஸ் விளையாட தெரியாதவர்களும் கூட எப்படி விளையாடுவது என்று கேட்டு கற்றுக் கொள்கிறார்கள். இந்த கடையின் தரையில் செஸ் கட்டம் போல வடிவமைக்கப்பட்டுள்ளதால் இங்கு வரும் குழந்தைகள் அதில் நின்று விளையாடுகிறார்கள்.

கடையின் வடிவமைப்பு மட்டுமல்ல இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களும் செஸ் போர்ட் போல் சட்டை அணிந்துள்ளார்கள். இது மக்களை இன்னும் ஈர்க்க செய்துள்ளது. செஸ் விளையாடிக்கொண்டே டீ குடிக்கலாம் என்று கடைக்கு வந்தவர்கள் ஒரு டீ குடிக்கும் நேரத்தில் ஆட்டம் முடியாததால் அடுத்த டீ ஆர்டர் செய்து விளையாடி முடித்த பிறகு தான் அங்கிருந்து கிளம்புகிறார்கள்.

Related Stories: